லண்டன்: கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரை இங்கிலாந்தில் அமுலில் இருந்த கோவிட் 19 லொக் டவ்ண இன் பின்னர் மீண்டும் இங்கிலாந்து இன்று முதல் டிசம்பர் 02 வரையுள்ள 4 வாரங்களுக்கு அமுல்படுத்துகிறது. (மேலும் நீடிக்கப்படலாம்)

கடந்த முதலாவது கோவிட் அலையில் அமுல்படுத்தப்பட்ட சமூக முடக்கத்தில் பல ஆயிரம் உயிர்களை இங்கிலாந்து இழந்தாலும் இலட்சக் கணக்கான உயிர்களை சமூக முடக்கம் காப்பாற்றியுள்ளது.

எனினும் பொருளாரதாரச் சரிவை இங்கிலாந்து எதிர்கொண்டது. இதன் காரணமாக முன்னரை விடவும் தளர்வுள்ள சமூ முடக்கத்தை இம்முறை இங்கிலாந்து அமுல்படுத்துகிறது.

இந்த சமூக முடக்கத்தை இப்போதைக்கு அமுல்படுத்தாவிட்டால் ஒரு நாளைக்கு 4000 மரணங்கள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது என உள்நாட்டு விஞ்ஞானிகள் பிரிட்டிஷ் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக இந்த முடக்கம் அமுலுக்கு வருகிறது.

கடந்த மே 19 இற்குப் பின்னர் மிகப்பெரிய மரண எண்ணிக்கை 500 நேற்று புதன்கிழமை இங்கிலாந்து சந்தித்தது.

அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், பார்மசி, போக்குவரத்து சேவைகள், தபாலகம், வங்கி திறக்கப்படும்.

பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறந்திருக்கும்.

உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கும் “ஒன்லி டேக் ஏ வே”

பப், கிளப், சினிமா மற்றும் ஜிம் மூடப்பட்டிருக்கும்.

வணக்கம், ஆராதனைகளுக்காக கூடுவது தவிர்க்கப்படும்.

மொத்தத்தில் பெரியளவு மாற்றம் இந்த சமூக முடக்கத்தில் இல்லை.

இருந்தாலும் குடும்பங்கள் ஒன்று சேர இயலாது.

18 வயதுக்கு மேல் ஆண், பெண் – தான் தனக்கு உழைக்க வேண்டும். தான் வெளியில் சென்று தனக்குரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். வயோதிபர்களுக்கும் இது விதிவிலக்கல்ல!

18 வயதுக்கு மேல் உழைக்கும் பிள்ளைகள் தாய், தந்தை வீடுகளில் இருந்தாளும் வாடகை கொடுக்க வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் உழைக்க வேண்டும். இருவரும் இணைந்து வாழ்க்கைச் செலவுகளையும், ஏனைய செலவுகளையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இது ஆங்கில மக்களின் இங்குள்ள வாழ்க்கை முறை.

மக்ககளின் அத்தியவசிய உணவுக் கொள்வனவை முடக்க முடியாது. முடக்கினால் வீடு வீடாகச் சென்று அத்தியவசியப் பொருட்களை 56 மில்லியன் மக்களுக்கும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

இருவரும் வேலைக்குப் போவதானால் பிள்ளைகளைப் பராமரிப்பது யார்?
அதனால் பாடசாலை திறக்க வேண்டும். பாடசாலை மூடப்பட்டால் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும். பிள்ளைகள் வீட்டிலிருக்க வேலைக்குப் போக முடியாது.

மனைவியன்றி கணவனும், கணவன் இன்றி மனைவியும் தன் பிள்ளைகளையும், பெறாபிள்ளைகளையும் பராமரித்து வாழ்பவர்களும் இங்கு அதிகமாக இருக்கின்றனர்.

பாடசாலை மூடப்பட்டு பிள்ளைகள் வீட்டிலிருந்தால் கீ வேர்க்கர்ஸ் வேலைக்குப் போக முடியாது. அதனால் கீ வேர்க்கர்ஸ் இன் பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும்.

இப்படி பல சிக்கல்கள் அரசாங்கத்திற்கு இருப்பதால் பாடசாலையை மூடும் திட்டம் தற்போதைக்கு அரசாங்கத்திடம் இல்லை. எனினும் அழுத்தம் தொடர்கிறது.

வேலை வாய்ப்புக்களை இழக்காமல் இருப்பதற்கு அரசாங்கமும், தொழில் நிறுவனங்களும் தொழிலாளிக்கு அவர் இழக்கும் வேலை நேரத்திற்கு ஏற்ப குறித்த வீதம் பணம் சம்பளமாக வழங்க வேண்டும்.

கடந்த வருடம் சுயதொழில் புரிவோருக்கு பல ஆயிரம் பவுண்ஸ்களை அரசாங்கம் உதவித்தொகையாகவும், கடனாகவும் வழங்கி இருந்தது. இம்முறையும் குறிப்பிட்ட அளவு கொடுப்பனவை அரசாங்கம் வழங்கும்.

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு பாடசாலை உணவு வவுச்சர் கொடுப்பனவுகளை அரசாங்கம் கடந்த சமூக முடக்கத்தில் வழங்கி இருந்தது. ஆனால் இம்முறை இந்த வவுச்சர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச்சில் கோவிட் 19 அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். இதனால் வைத்தியசாலைகளில் இடமின்றி நோயாளிகள் தவித்தனர். PPE பாதுகாப்பு உபகரணங்களும் பற்றாக்குறையாகின.

ஆனால் இம்முறை நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இதற்குள் அவர்களாவே சென்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொசிடிவ் என்றால் அரசாங்க மருத்துவ அறிவுறுத்தல்களுக்கமைய அவர்கள் இல்லங்களில் அல்லது வைத்தியசாலைகளில் பராமரிக்கப்படுவர்.

பொசிடிவ் நிலையில் இருக்கும் ஒரு குடும்பம் 3 வது வாரமாக சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது தாங்கள் தேறி வருவதாகவும் தாங்கள் தொடர்ந்து பாட்டி வைத்தியத்தைக் கடைப்பிடிப்பதாகவும் கூறினர்.

மருத்துவ உபகரணங்கள் கடந்த முறை பெரும் தட்டுப்பாடாக இருந்தன. ஆனால் இம்முறை தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த முறை லோக் டவ்ண் காலகட்டத்தில் மக்கள் முந்தியடித்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர். இம்முறை அந்த பதட்டத்தை பெரும்பாலும் மக்களிடம் காண முடியவில்லை. சனிட்டைசர்ஸ், டொய்லட் ரோல்ஸ், ஹேண்ட் வோஷ் தாராளமாகவே கடைகளில் கிடைக்கப்பெறுகின்றன.

வைத்தியர்களும், சுகாதார அதிகாரிகளும் அர்ப்ணிப்புடன் தங்களது கடமையைச் மேற்கொள்கின்றனர்.

சமூக வலைத்தள, யூ டியூப் கோவிட் 19 ஆரவலர்களெல்லாம் இங்கு கிடையாது. இருந்தால் அவர்கள் சம்பாதிக்க வந்த வெளிநாட்டவர்களாக இருப்பார்கள்.

அதிகமான மக்கள் முகக்கவசம் அணிகின்றனர். சமூக இடைவெளியைப் பேணுகின்றனர். அரசாங்க, வைத்திய ஆலோசனையை மதிக்கின்றனர், கடைப்பிடிக்கின்றனர்.

NHS COVID 19 apps ஐ தரவிறக்கம் செய்யும்படி மக்கள் வேண்டப்பட்டனர். சகல அறிவுறுத்தல்களும் இதன்மூலம் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.

பொலிஸ், ஆமி எல்லாம் போட்டு மக்களை இங்கு முடக்க முடியாது. சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் 10000 பவுண்ஸ்வரை அறவிடப்படும். அவ்வளவுதான் வெரி சிம்பிள்!

கடந்த லொக் டவ்ண், கோடை காலத்தில் வந்ததால் வருடத்தில் 3 மாதங்கள் அனுபவிக்கும் கோடையை இழந்து வீட்டிற்குள் முடங்க வேண்டியிருந்தது. இம்முறை குளிர் காலத்தில் இந்த லொக்டவ்ண் வருவதால் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதில் பெரிய மாற்றம் ஒன்றும் மக்களுக்கு ஏற்படாது.

இங்கிலாந்தின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றான உதைப்பந்தாட்டம் இம்முறை தொடர்கிறது. இதனால் உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு சோர்விருக்காது.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வருடா வருடம் நவம்பரில் இருந்தே வர்ண மின் விளக்குகளாலும், அலங்காரங்களாலும் அழகாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்து இம்முறை முடங்கப்போவது வெள்ளை மக்களை அதிகம் நோகடித்திருக்கிறது.

ஒரு மாதத்திற்கு தெரு அலங்காரங்கள் மக்களில்லாமல் குளிரில் உறைந்துபோகும். துணிக்கடைகளின் அழகிய பொம்மைகளும் ஆடையின்றியே கடைக்குள் முடங்கிவிடும்.

இதுவரையில் இங்கிலாந்தில் மாத்திரம் 45,000 கோவிட் 19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

மரணித்தவர்களுள் முதயவர்கள் அதிகம், அதிலும் தெற்கு ஆசிய நாட்டவர்கள் இருமடங்கு மேலதிகம்.

முகமட் ஜலீஸ், இங்கிலாந்து