புலிகள் மேற்கொண்ட மெகா கொள்ளை- காத்தான்குடி சந்தித்த மற்றுமொரு சோகம்

காத்தான்குடி: காத்தான்குடியின் மறக்க முடியாத அந்த 1990 ஏப்ரல், மே மாதங்கள். சுட்டெரிக்கும் வெயில். நோன்பு, சித்திரைப் புதுவருடம், நோன்புப் பெருநாள் என 1985 இற்குப் பின்னர் காத்தான்குடி வழமைக்குத் திரும்புகிறது. புலிகள்ஆயுதங்களைக் கையிலெடுத்து பகிரங்கமாக வெளியே வந்திருப்பதால் படுவான்கரை வயல்காணிகளின் பக்கம் எம் மக்களின் அவதானம் இருக்கவில்லை.
அரசாங்கம்-புலிகள் இரு தரப்புக்கும் இடையில் சமாதானம் நிலவியது. வர்த்தகத்தை நம்பி இருந்த எமது சமூகம் காத்தான்குடி பஸாரில் புதிதாக கடைகளைத் திறந்து வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக அந்த நோன்பு நாட்களில் காத்தான்குடி பிரதான வீதி அதிகாலைவரைக்கும் மின்னிக்கொண்டிருக்கும் . மெயின் ரோட் “சவூதி போல இருக்குது” என அன்று பலர் கூறிக்கொண்டதும் ஞாபகம்!
சோலாப்பூர் செருப்பு, மார்டின் சேர்ட், கோல்ட்லீஃப் சேர்ட் என இளைஞர்கள் “ட்ரேட் மார்க்” இற்கு மாறிக்கொண்டிருந்தனர்.
பிரதான வீதி, கடற்கரை வீதி- சந்திக்குச் சந்தி கூல் ஸ்பொட்ஸ் – குளிர்பானக் கடைகளும், அதன் பழரசமும், அலங்கார விளக்குகளும் கண்களையும், நாக்கையும் சீண்டிச்செல்லும்.
படுவாங்கரையிலிருந்து வள்ளங்கள் வரத்தொடங்கியதால் பல வருடங்களாக சோபிக்காதிருந்த ஊர் வீதி சில்லறைக் கடைகளும், கா.குடி 5 பொதுச்சந்தையும் அதனைச் சூழவிருந்த பிடவைக் கடைகள், நூல் கடைகளும் ஜொலிக்கத் தொடங்கின. மொத்தத்தில் காத்தான்குடி வர்த்தகர்கள் பல வருடங்களுக்குப் பின்னர் புன்னகைத்தனர். அன்றைய காத்தான்குடி வரலாற்றில் அதிகமானவர்கள் ஹஜ் யாத்திரைக்குச் சென்றதும் 1990 ம் வருடம்தான்.
புலிப்பயங்கரவாதிகளின் கொள்ளையடிப்பு, ஆட்கடத்தல், கப்பம், சுற்றிவளைப்புக்கு மத்தியிலும் ஊர் தலைநிமிர்ந்து நின்றது.
புலிகளின் தலைவர் பிரபாகரனையும் வடக்கு போராளிகளையும் புகழ்ந்து தள்ளும் ‘ஈழ நாதம்’ பத்திரிகை பலவந்தமாக எமது வர்த்தகர்களிடம் திணிக்கப்பட்டு, குறைந்தது 10 ரூபாய் அறவிடப்பட்டது.
மட்டக்களப்பு நகரமும் 1985 இற்குப் பின்னர் வழமைக்குத் திரும்புகிறது. ஹிஜ்ரா, உதயதேவி மற்றும் இரவு தபால் ரயில் என்று ரயில் சேவை தொடங்குகிறது. சினிமாத்திரைகளும், நாளாந்த 3 காட்சிகளும் மக்கள் வெள்ளத்தால் நிறைகிறது.
26.06.1990 இரவு 8 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் நூற்றுக்கணக்கான புலிப்பயங்கரவாதிகள் சூழ்ந்துகொண்டனர். மட்டக்களப்பு பொலிஸ்நிலைய தாக்குதலின் பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் மின்சாரம் புலிகளால் துண்டிக்கப்பட்டிருந்தது. இஷாத் தொழுகைக்குச் சென்றவர்களும் , பிரதான வீதியைக் கடக்க முற்பட்டவர்களும் வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். (சிலர் இஷாத்தொழுதுவிட்டும் வந்திருந்தனர்).
கணிசமான புலிகள் பிரதான வீதியில் நிலைகொண்டிருக்கும் தகவல் ஊருக்குள் பரவுகிறது. வழமையாக புதிய காத்தான்குடியின் இதயப்பகுதியினை புலிகள் அடிக்கடி சுற்றிவளைப்பது வழக்கம். இதே போல் ஓர் சுற்றிவளைப்பை புலிகள் மேற்கொள்ளப்போகின்றனரா என பலருக்கு சந்தேகம். ஏனைய பள்ளிவாயல்களில் இஷாத்தொழுகையை அவசரமாக முடித்துவிட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.
இரவு 9 மணியிலிருந்து காத்தான்குடி பிரதான வீதியின் இருமருங்கிலுமிருந்த கடைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, அதிகாலை 4 மணிவரை கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள், பணம் கடத்தப்பட்ட காத்தான்குடி வர்த்தகர்களின் வாகனங்களில் ஏற்றப்பட்டு மண்முனைத் துறையை சென்றடைந்தன.
புலிப்பயங்கரவாதிகளின் மற்றுமொரு குழவினர் காத்தான்குடி 5 பொதுச்சந்தையின் உள்ளே இருந்த கடைகளையும், வெளியில் இருந்த அத்தனை கடைகளையும் உடைத்து கொள்ளையடித்தனர். இதுதவிர, உள்ளுர் வீதிகளில் இருந்த மொத்த வியாபார நிலையங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் புலிப்பயங்கரவாதிகள் படுவான்கரையை சென்றடைந்தனர். பிரதான வீதிகளில் அரிசி, மாவு, சீனி, சில்லறைக் காசுகள், சீமந்து, இரும்புக்கம்பிகள், ஆணிகள் மற்றும் வீட்டு சமையல் பாத்திரங்கள் என சிதறிக்கிடந்தன. காத்தான்குடி 5 பொதுச்சந்தையிலும் இதே காட்சி!
மறுநாள் சுப்ஹூத்தொழுகைக்கு மக்கள் வரத்தொடங்கவே புலிகளின் சூரையாட்டத்தை மக்கள் அறிந்தனர். வாய்விட்டு அழுதனர்.
இக்கொள்ளைச் சம்பவம் ஆவணப்படுத்தப்பட வேண்டியது. இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட தொகை மதிப்பிடப்படவில்லை!
காத்தான்குடி சந்தித்த மற்றுமொரு கசப்பான சம்பவமாக புலிப்பயங்கரவாதிகளின் இந்த மெகா கொள்ளை வரலாற்றில் பதியப்பட்டது.
- முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்