மட்டு, கல்முனை பொலிஸ் நிலையங்கள் மீதான முற்றுகையும் 1000 இற்கும் அதிகமான பொலிஸார் புலிகளால் மிலேச்சத்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட தினமும் இன்றாகும்



- முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்
இந்திய அமைதிப்படை கால்பதித்திருந்த காலத்தில் தினமும் இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். சாதாரணமாக இஷாத் தொழுகை நிறைவடைந்தவுடனயே இந்தியப்படையினர் ஊருக்குள் வந்துவிடுவர். வீதிகளில், பள்ளிக்கு வெளியில் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவது வழமையான விடயமாக அன்றிருந்தது.
இடைக்கிடையே சுற்றிவளைப்புக்களும் கைதுகளும் இடம்பெறும். இவ்வாறிருந்த நிலையில்தான் இந்திய ஜவான்கள் இலங்கையைவிட்டு வெளியேறுகின்றனர்.
இந்தியப்படையின் வெளியேற்றமும் புலிப் பயங்கரவாதிகளின் நர வேட்டைகளும்
1989 இறுதியில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச, இந்தியப் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் இடம் விடுத்த கோரிக்கைக்கேற்ப 1990 மார்ச் மாத இறுதியுடன் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டு வெளியேறினர்.
இறுதியாக இலங்கையின் வடகிழக்கை விட்டு வெளியேறியதுடன் வட-கிழக்கு மாகாணங்களை தமிழீல விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் தங்களது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.இக்காலகட்டத்தில் அரசாங்கத்திற்கும் புலிப்பயங்கரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ‘ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்’ என்ற இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிராகரித்தார்.
பேச்சுவார்த்தை முறிதலின் பின் வடகிழக்கில் பதட்டம் சூழ்ந்தது.பேச்சுவார்த்தை முறிந்தாலும் ஆயுதங்களுடன் நடமாடும் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்தும் இராணுவத்தினரை தங்களது முகாம்களுக்குள் முடங்கியிருக்கும்படி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரன்ஜன் விஜேரட்ண ராணுவத்தைக் கேட்டுக்கொண்டார்.1990 மே மாத இறுதியில் மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் நோக்கில் புலிப் பயங்கரவாதிகள் வட கிழக்கில் பதுங்குக் குழிகளை அமைப்பதையும், மண்மூடைகளை அமைத்து தங்களது முகாம்களைப் பலப்படுத்துவதையும் அறிந்த இராணுவத்தினர்,
கொழும்பிற்கு எத்திவைத்தனர். ஆனால் மௌனம் காக்குமாறு இராணுவத்திற்கு கட்டளை வந்தது.
1990. ஜூன் மாதம் 7ம் திகதி. வடக்கில் வவுனியா முகாமிலிருந்து முல்லைத்தீவு முகாமிற்குச் சென்ற இராணுவ வாகனம் புலிப்பயங்ரவாதிகளின் துப்பாக்கி வேட்டுகளுக்கு உள்ளாகியது. இத்தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர். பதட்டம் அதிகரிக்கவேதொடர்ந்து மௌனம் காக்குமாறு கொழும்பிலிருந்து இராணுவத்திற்குக் கட்டளை வந்தது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் சுற்றிவளைப்பிற்கான ஆரம்ப சம்பவம்
1990. ஜூன் 10ம் திகதி.சிங்கள இளம் பெண் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல் ஒன்றினை , அப்பெண்ணை தனிமையில் சமரசப்படுத்திக்கொண்டிருந்த வேளையில் அப்பெண்ணின் கணவருக்கும், குறித்த முஸ்லிம் இளைஞருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன் காரணமாக குறித்த முஸ்லிம் இளைஞரையும் அப்பெண்ணின் கனவரையும் மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்து ‘லொக்அப்’ இல் வைக்கின்றனர். இந்த முஸ்லிம் இளைஞர் ஓர் தையல் காரர். இவர் புலிகளுக்கு ஆடைகள் தைத்துக்கொடுப்பதினூடக புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர். ஆனால் இவ்விளைஞர் புலி ஆதரவாளர் என்று பொலிஸாருக்குத் தெரியாது!
இரவு 9:30 மணி. ஆயுதங்களுடன் வந்த சில புலிகள், கைதான டைலரை விடுவிக்கும்படி கோரினர். தாங்கள் அவரை மட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம் என பொலிஸார் கூறினர். இக்கூற்றை நம்ப முடியாத புலிகள் அவ்விடத்தில் இருந்த இரு தமிழ் பொலிஸ் அதிகாரிகளைக் கடத்திக்கொண்டு சென்றனர். மட்டு வைத்தியசாலைக்குச் சென்ற புலிகள் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த அந்த டைலரை பலவந்தமாக விடுவித்துச் சென்றனர்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் – கைதும் கொள்ளையும்
1990. ஜூன் 11. காலை 6 மணிக்கு ஆயுதங்களுடன் வந்த புலிகள் மீண்டும் 3 பொலிஸ் அதிகாரிகளைக் கடத்திக்கொண்டு சென்றனர். இச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஆயுதம் தரித்த சுமார் 250 புலிப்பயங்கரவாதிகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைக்கின்றனர்.அங்கிருந்த சிங்கள பொலிஸ் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் மட்டு விமான நிலையத்தை நோக்கி அனுப்பப்பட்டனர். அங்கிருந்த தமிழ் பொலிஸ் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் சென்ட் மேரி’ஸ் தேவாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். மீதமிருந்த உப பொலிஸ் நிலைய அதிகாரியும் 4 பொலிஸாரும் பொலிஸ் நிலையத்திற்குள் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டனர்.
பின்னர் அங்கு ரொக்கமாக இருந்த 45 மில்லியன் ரூபாய்களும், தங்க நகைகளும், 109 ரி.56 ரைபில்களும், 77 ரி.84எஸ் ரைபில்களும், 28 இலகு இயந்திரத் துப்பாக்கிகளும் (Machine guns), 29 செல்ப் லோடிங் ரைபில்களும், 65 சப் மெசின் கன், 78 303 துப்பாக்கிகளும் மற்றும் 78 எஸ் ஏ. ஆர் 80 துப்பாக்கிகளும் புலிப்பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டன.கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை உலவு இயந்திரங்களில் காத்தான்குடி ஊர்வீதியாக மண்முனைத்துறைக்கு புலிகள் எடுத்துச்சென்றதை அன்று எமது மக்கள் கண்கூடாகக் கண்டனர்.
“அன்றைய தினம் எங்களுக்கு 2 கி.மீ இற்கு அப்பால் இருந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றிவளைப்புப் பற்றி எந்த தகவலும் தனக்குத் தெரியவில்லை. எந்த உதவிகளும் பொலிஸ் நிலையத்திலிருந்து எங்களுக்கு கோரவில்லை” எனவும் கூறுகிறார் அப்போதைய கல்லடி இராணுவ முகாம் அதிகாரியாக இருந்த ஹிரான் கலன்கொட. இவர் மட்டக்களப்பிலிருந்து அம்பாறைவரை தனது இராணுவ அதிகாரங்களைப் பிரயோக்கத்தக்கதாக அரசு இவருக்கு அன்று வழங்கியிருந்தது.
அன்றைய தினம் காலை 6.20 மணிக்கு எனது பள்ளித் தோழரும் மட்டக்களப்பு எல்.ஹெச். பேக்கரி உரிமையாளருமான- அந்நபர் எனக்கு தொலைபேசியூடாக மட்டக்களப்பிலுள்ள சிங்களவர்கள் அனைவரும் அடையாளங்காணப்பட்டிருப்பதாகவும் 5 நிமிடங்களுக்குள் இவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு தங்களை புலிகள் கோரியுள்ளதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக ஹிரான் கலகொட முன்பு ஓர் சந்தர்ப்பத்தில் கூறியிருந்தது ஞாபகம்.
இதற்கிடையில் பி.ப. 2:30 மணிக்கிடையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களும் காலி செய்யப்படவேண்டும் என புலிகள் தங்களது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றனர்.புலிகள் சுற்றிவளைத்தால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறும் தங்களது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் தாங்கள் பொறுப்பு எனவும் இது ஜனாதிபதி பிரேமதாசவின் கட்டளை எனவும் அப்போது ஐ.ஜி.பி யாகவிருந்த ஏர்னஸ்ட் பெரேரா பொலிஸாருக்கு வாக்குறுதியளிக்கிறார்.
வாக்குறுதியை நம்பிய பொலிஸார் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்குமிங்கும் தடுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த 899 பொலிஸ் அதிகாரிகள் ஒன்றுதிரட்டப்பட்டு, விநாயகபுரத்திற்கும் திருகோணமலை எல்லைக்கருகிலுள்ள காட்டிற்கும் புலிப் பயங்கரவாதிகள் அழைத்துச் சென்றனர். இவர்களுள் சிலர் ஏதோ ஓர் வகையில் தப்பித்துச் சென்றனர்.
கைதிகளாக அங்கு வந்து சேர்ந்த பொலிஸாரின் கைகளைப் பின்னால் கட்டிய நிலையில் புலிப்பயங்கரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். 774 பொலிஸார் அவ்விடத்தில் சுருண்டு மாண்டனர். பின்னர் அடுத்தடுத்த தினங்களிலும் இப்பிரதேசங்களில் படுகொலைகள் இடம்பெற்றன.
கல்முனை பொலிஸ் நிலைய சுற்றிவளைப்பும் படுகொலையும்
கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏ.ஸ்.பி. ஆக இருந்தவர் ஐவன் பொடேஜூ. ஓர் வீரமிக்க அதிகாரி. மதியம் 2:30 மணிக்கு கல்முனை பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த புலிப்பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்தனர். சரணடைந்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்த பொடேஜூ, சக அதிகாரிகளுடன் ஒருமித்து சாகும் வரை தாக்குதல் என முடிவெடுத்ததன் பின்னர், புலிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார்.
மதியம் 3 மணிக்கு ஆரம்பித்த தாக்குதல் மாலை 6 மணிவரை தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்துக்குள் இருந்த இலகு இயந்திரத் துப்பாக்கிகள், சொட்கண், மோட்டார், இன்னும் சில இயந்திரத் துப்பாக்கிகள்கொண்டு உக்கிரமான தாக்குதலைத் தொடுத்து புலிகளின் தாக்குதலை கல்முனை பொலிஸார் முறியடித்தனர்.
புலிகளுக்கு பொலிஸ் நிலையமொன்றை அல்லது இராணுவ முகாமொன்றை தாக்கும் வலு அன்றைய தினம்வரை அவர்களுக்குக் கிடையாது. வான் உதவியையும், ஆர்டிலரி உதவியையும் கல்முனைப் பொலிஸ் கோரியது. எனினும் இவை அனைத்தும் அம்பாறை இராணுவப் பிரிவால் மறுக்கப்பட்டமை பரிதாபமே!
தாக்குதலை நிறுத்துங்கள்! ஆயுதங்களைக் கீழே போடுங்கள்!! சரணடையுங்கள்!!!
தாக்குதல் இடம்பெற்றிருந்த இறுதி நேரத்தில் கொழும்பிலிருந்து அவசர அழைப்பு ஏ.ஸ்.பி. பொடேஜூக்கு வருகிறது.
வேறு வழி இல்லை!
சரணடைந்தார்கள்!!
இதற்கிடையில் கல்முனையில் இராணுவத்தினர் மீது புலிகள் மேற்கொண்ட மற்றுமொரு திடீர் தாக்குதலில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
சரணடைந்த 324 சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் புலிகளால் திருக்கோவில் காட்டிற்குக் கடத்திச் செல்லப்பட்டார்கள். கண்களைக் கட்டினார்கள், கைகளை பின்னால் கட்டினார்கள். முகம் குப்புறப்படுத்தினார்கள். உடலின் பின்புறத்தில் சுட்டுவீழ்த்தி தங்களது பயங்கரவாதத் தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.கல்முனை பொலிஸ் நிலைய சம்பவத்தில் அதிகமான முஸ்லிம் அதிகாரிகள் பலியாகியிருந்தனர்.
ஓர் யுத்த நிறுத்த வேளையில் யுத்தத்திற்கு உடல் ரீதியாக, மன ரீதியாக பொலிஸாரும், இராணுவத்தினரும் தயாரற்றிருந்த நேரத்திலேயே இந்தத் கடத்தலும் படுகொலையும் மனிதாபிமானமற்ற முறையில் மட்டு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றன.கிழக்கில் ஒரே தினத்தில் தங்களால் கொல்லப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரின் படுகொலையிலிருந்து ஆரம்பித்த புலிப்பயங்கரவாதிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் தாகத்தின் அடுத்த நகர்வு… காத்தான்குடி வர்த்தகம்! ….. இலக்குவைக்கப்படுகிறது. (இன்ஷா அல்லாஹ் விரைவில் எதிர்பார்க்கவும்)
இக்கொடூரச் சம்பவங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இப்படுகொலை சம்பவத்தில் அநியாயமாகக்கொல்லப்பட்ட பொலிஸ், இராணுவ அதிகாரிகள் அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
- முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்
படங்கள்: மறைந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொபே கொடுவ மற்றும் கல்லடி இராணுவ முகாம் அதிகாரி ஹிரான் கலகொட- கல்லடி முகாம் 1990.
இந்திய ஜவான்கள் வெளியேறுவதற்கு தயார் நிலையில்.