- முஹம்மது நியாஸ்
இலங்கை நாட்டில் சமகாலத்தில் நாளாந்தம் நிகழ்ந்தேறி வருகின்ற வீதி விபத்துக்கள் மூலமாக வாகன சாரதிகளும் பொதுமக்களும் சடுதியான உயிரிழப்புக்களையும் நிரந்தர இயலாமைகளையும் சந்தித்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.
அவ்வப்போது அரசாங்கத்தினால் வாகன, வீதிப்போக்குவரத்து தொடர்பிலான புதிய சட்ட திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டு, மோட்டார் போக்குவரத்து பொலிசாரினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகைப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வந்தபோதிலும்கூட நாளாந்தம் நடைபெறுகின்ற விபத்துக்களின் விகிதாசாரம் அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.
விபத்துக்களும் மரணங்களும் இன்னபிற இழப்புக்களும் இறைவன் வகுத்த விதியில் நின்றும் உள்ளதென்று ஒரேவரியில் இதற்கு முடிவுரை எழுதிவிடமுடியும். இருந்தப்போதிலும் வீதியால் பயணிக்கின்ற ஓரிரு நபர்களால் ஏற்படுகின்ற தவறுகளுக்கு அருகில் செல்கின்ற அப்பாவிகளும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை காணப்படுவதால் இவ்விபத்துக்களை தவிர்ப்பதற்காக அறிவுக்கெட்டிய வகையிலான சில ஆலோசனைகளை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான ஈடுசெய்யமுடியாத பேரிழப்புக்களை ஏற்படுத்துகின்ற வீதி விபத்துக்கள் நிகழ்வதற்கு பல்வேறு வகைப்பட்ட காரணிகளை, தவறுகளை, கவனயீனங்களை இனங்காண முடிகிறது.
இக்காரணிகளை பொறுத்தவரைக்கும் வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள், பாதசாரிகள், பொதுமக்கள் மாத்திரமல்லாது பொலிஸ் அதிகாரிகளிடத்திலும் அத்தவறுகள் நிறைந்தே காணப்படுகின்றதென்பது நிதர்சனமான உண்மையாகும்.
வாகனங்கள் அதிகமாக செலுத்தப்படுகின்ற பிரதான வீதிகளில் உள்ளக வீதிகள் சந்திக்கின்ற இடங்களில் வீதி சமிக்ஞைகள் பொருத்தப்படுவது அல்லது கட்டாயச்சுற்றுவட்டங்கள் அமைக்கப்படுவது விபத்துக்களை தவிர்ப்பதற்கும் சீரான போக்குவரத்துக்கும் ஏற்றதொரு பொறிமுறையாகும்.
ஆனால் நமது நாட்டில் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்கள் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களில் இந்த ஏற்பாடுகள் ஒர் எட்டாக்கனியாகவே இருந்துவருகின்றன. இருந்தபோதிலும் அவ்வாறு வீதிச்சமிக்ஞைகள், சுற்று வட்டங்கள் இல்லாத இடங்களில் போக்குவரத்துக்களை சீர்செய்வதற்காகவே மோட்டார் போக்குவரத்து பொலிசார்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆனால் நமது பிரதேசங்களிலுள்ள வீதியோரங்களில் கடமைக்காக நிற்கின்ற பொலிசாரோ தண்டப்பணத்திற்கான ரசீதுகளை வழங்குவதை மாத்திரமே தங்களுடைய ஒரேயொரு கடமையாக கருதி செயற்படுவது இவ்வாறான விபத்துக்களுக்கு ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.
ஒரு பிரதான வீதியின் நாற்சந்தியில் வாகன நெரிசல் ஏற்படுகின்றபோது அவ்வாகனங்களின் போக்குவரத்தை சீர்செய்வதற்காக மூன்று வீதிகளை இடை மறித்து ஒவ்வொரு வீதிகளாக திறந்து வாகனங்கள்செல்ல வழிசெய்வதே மோட்டார் போக்குவரத்து பொலிசாருடைய கடமையாகும். அதாவது ஒரு நாற்சந்தியிலுள்ள வீதிச்சமிக்ஞை விளக்குகளின் பணி எதுவோ அதே பணியைத்தான் அவ்வீதிச்சமிக்ஞை விளக்குகள் இல்லாத இடங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிசார் மேற்கொள்ளவேண்டும்.
ஆனால் நமது பொலிஸ் உத்தியோகத்தர்களோ அவ்வாறு செய்வதில்லை. வாகனங்கள் எவ்வளவுதான் நெரிசலாக சென்றுகொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் வீதியோரத்திலுள்ள மர நிழல்களில் கைகட்டியவண்ணம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு விபத்து நடந்த மறுகணமே உடனடியாக ஸ்தலத்திற்குவந்து முறைப்பாடு பதிகின்ற வேலையைத்தான் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாடிக்கையாக மேற்கொண்டுவருகின்றனர். இதுவும் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதற்கான மிகமுக்கியமான காரணமாகும்.
ஒரு விபத்து நடந்ததன் பின்னர் அது தொடர்பிலான காரணங்களையும் விசாரணைகளையும் வகைப்படுத்துகின்ற பொலிசார் அவ்விபத்தை முன்கூட்டியே தவிர்ப்பதற்கான வழிவகைகளை களத்தில் நின்றும் மேற்கொள்வது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
மேலும் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் கைக்கிள்களை வயோதிபர்கள், சிறுவர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். அதிலும் குறிப்பாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்ற பிரதான வீதிகளில் இவ்வாறான சிறுவர்கள், வயோதிபர்கள் சைக்கிள்களில் பிரவேசிப்பதும் விபத்துக்கள் நடைபெறுவதற்கு ஒரு காரணியாக அமைந்துவிடுகின்றது.
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறவேண்டுமானால் அதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாகும்.
ஒரு வீதியால் பயணிக்கின்றபோது முன்னாலும் பின்னாலும் பக்கவாட்டிலும் பயணிக்கக்கூடிய வாகனங்களை கவனத்தில்கொண்டு தமது வாகனத்தை செலுத்தக்கூடிய அளவுக்கு கண்பார்வை, செவிப்புலன் மற்றும் சமயோசிதமாக செயல்படக்கூடிய அளவுக்கு உடல் நலன் என்பன அமைந்திருப்பது ஒரு வாகன ஓட்டுனருக்கான அடிப்படைத்தகுதிகளில் மிகவும் பிரதானமான ஒன்றாகும்.
ஆனால் அந்த உடல்த்திறனையும் சமயோசித சிந்தனையையும் பன்னிரண்டு வயதுக்கும் குறைந்த சிறுவர்களிடத்திலோ அல்லது அறுபது வயதையும் கடந்த முதியவர்களிடத்திலோ நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் சிறிவர்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் முடியுமான வரையில் பிரதான வீதிகளில் நெரிசலான இடங்களில் வாகனங்களை குறிப்பாக இருசக்கர வாகனங்களை செலுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.
அதேநேரம் வாகனங்களை செலுத்துகின்ற ஒவ்வொருவருடைய கவனமும் பொறுப்புணர்வும் தாங்கள் செலுத்துகின்ற வாகனங்களுடைய பெறுமானத்தை பொறுத்ததாகவே அமையப்பெற்றிருக்கும்.
லொறி, பஸ் போன்ற கனரக வாகனங்களை செலுத்துகின்ற ஒரு சாரதிக்கு வீதிப்போக்குவரத்து தொடர்பாக இருக்கின்ற அறிவும் கவன உணர்வும் ஒரு சாதாரண துவிச்சக்கர வண்டியை செலுத்துகின்ற ஒருவருக்கு இருக்காது. துவிச்சக்கர வண்டி என்பது ஒரு சிறிய வாகனமாதலால் அதை பயன்படுத்துபவருக்கும் அதற்கேற்ற கவன உணர்வு மாத்திரமே இருக்கும்.
அந்த வகையில் இவ்வாறான இரு வகைப்பட்ட சாரதிகளும் வாகனங்களும் ஒரே வீதியில் ஒன்றாக பயணிக்கின்றபோது விபத்துக்கள் ஏற்படுவது சகஜமாகிவிடுகிறது. இதன் காரணமாகத்தான் முன்னேற்றமடைந்த நாடுகளில் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செலுத்துவது முற்றாகத்தடை செய்யப்பட்டு அவற்றுக்கென தனியான பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆகவே நமது பிரதேசங்களில் பிரதான வீதிகள் வாயிலாக துவிச்சகர வண்டிகளில் பயணிக்கின்ற நபர்கள் நடு வீதிகளில் பயணிப்பதை தவிர்த்து அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஓரங்களில் மாத்திரமே பயணிப்பது கட்டாயமானதாகும். அதேபோன்று வீதியை குறுக்கறுக்கின்றபோதும் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது கட்டாயமானது.
மேலும் தற்போது மஞ்சள் கடவைகளில் வைத்து விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாக காணப்படுகிறது. மஞ்சள் கடவைகள் ஒரு இடத்தில் இருந்தால் அக்கடவையில் இருந்து சுமார் முப்பது அடி தூரத்திலேயே அதற்கான எச்சரிக்கை கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. இவை குதிரை வரிக்கோடுகள் என்றழைக்கப்படுகின்றன. ஆனாலும் சில வாகன ஓட்டுனர்கள் இந்த எச்சரிக்கை கோடுகளை கணக்கில் கொள்ளாமல் மிதமிஞ்சிய வேகத்தில் வாகனங்களை செலுத்துவதும் இவ்வாறான விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன.
அத்தோடு வீதிகளில் பயணிக்கக்கூடிய வாகனங்களின் தொழிநுட்ப ரீதியான திறன் மிகவும் பிரதானமானதாகும். இருபக்க சைகை விளக்குகள், ஒலியெழுப்பும் ஹோர்ன், பிரேக் மற்றும் டயர்கள் என்பன பயணத்துக்கு ஏற்ற வகையில் அமையப்பெற்றிருத்தல் அவசியமானதாகும்.
மாத்திரமன்றி வீதியால் பயணிக்கின்ற எந்தவொரு வாகனத்திற்கும் வேகக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். முன்னால் செல்கின்ற வாகனம் திடீரென நிறுத்தப்படுகின்றபோது அல்லது வேகத்தை குறைக்கின்றபோது ஒரு குறுகிய தூரத்திற்குள் சடுதியாக வாகனத்தை நிறுத்திவிடக்கூடிய அளவுக்கு கையடக்கமான வேகமே பாதுகாப்பானது.
எனவே, பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்துகின்றபோது முடியுமானவரை வாகனத்தின் திறன் மற்றும் வாகன சாரதிகளுடைய உடல், உளரீதியான தெளிவான நிலைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். அதுவே வாகனத்தை செலுத்துபவர்களுக்கும் வீதியால் பயணிக்கின்ற ஏனையோர்களுக்கும் பாதுகாப்பானதாக அமையும்.
இறுதியாக,
விபத்துக்களின்போது வாகனங்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்களை சீர்செய்துவிடமுடியும். காரணம் அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் தாராளமாகக்கிடைக்கின்றன. ஆனால் மனிதர்களுக்குரிய உதிரிப்பாகங்களோ அல்லது மனித உயிர்களோ அவ்வாறு வியாபார சந்தைகளில் விலையாகக்கிடைப்பதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.