Jaffna Muslims forcibly expelled 1990

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான #Gowripal Sathiri Sri அவர்கள் எழுதிய ”ஆயுத எழுத்து” நூலில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியதை குறித்த ஒரு பகுதி..

” 1990 அக்டோபர் மாதம் 30 ம தேதி புதன்கிழமை காலை புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்குடா வழமைபோல விடிந்திருந்தது, ஆனால் யாழில் வசித்த முஸ்லிம்கள் மட்டும் காலை பள்ளிவாசலில் இருந்து எழும் பாங்கோசை சப்தத்தோடு எழுந்து தங்களுக்கு வழமைக்கு மாறானதொரு சம்பவம் நிகழப்போகின்றது என்று தெரியாமல் தங்கள் வேளைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

யாழ் மானிப்பாய் வீதியில் யாழ் நகரின் நுழைவாசலில் உள்ள ஐந்து சந்தில் கலீலின் பிரபலமான உணவகம் ‘ பிளவுஸ்’ என்ற உணவகம். இது யாழில் உள்ள அசைவப் பிரியர்களின் சொர்க்கம் என்று சொல்லலாம். மாட்டு ரோஸ் கறி, மாட்டிறைச்சி கொத்துரொட்டி என்பன இங்கு பிரபலம், அதே நேரம் 80-களில் யாழில் தோன்றிய இயக்கங்களின் ஆரம்பகால உறுப்பினர்கள் எவனுமே இந்தக் கடையில் சாப்பிடாதவர் இல்லையென்று சொல்லலாம். அனைவரையும் இயக்க பேதமின்றி நம்ம பையங்கள் என்று வரவேற்று உபச்சரிப்பவர் கலீல்.

….. வீதியில் வாகனத்தில் பூட்டப்பட்ட ஒலிப்பெருக்கியில் ”முஸ்லிம் மதபோதர்களையும் வீட்டு குடும்பத் தலைவர்கள் அல்லது வீட்டுக்கு ஒருவர் உடனடியாக ஓஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்துக்கு வரும்படி திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருந்தார்கள். வாகனங்களுக்குள் ஆயுதம் தாங்கிய புலிகள் உறுப்பினர்கள் முகங்களை கடுமையாக்கியபடி அமர்ந்திருந்தார்கள். ———————————–

யாழ் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான ஆண்கள் மதத்தலைவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒஸ்மேனியா கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தார்கள். மைதானத்தை சுற்றி ஆயுதம் தாங்கிய புலி உறுப்பினர்கள் காவல் காத்திருக்க மத்தியானம் அளவில் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ஆஞ்சநேயர் (பின்னர் இவரது பெயர் இளம்பருதி) அங்கு வந்து சேருகிறார்.

ஆஞ்சநேயர் என்ன சொல்லப்போகிறார் என அனைவருமே கூர்ந்து கவனித்துகொண்டிருக்க அவரே,
‘’ யாழில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அதுவும் இன்றைக்கே வெளியேற வேண்டும். அதற்குக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்க முடியும்’’ எனச் சுருக்கமாக சொல்லிவிடுகிறார்.

இலங்கை ராணுவம் மீண்டும் கோட்டையை பிடிக்க முயற்சிப்பதால் யாழ்குடா மக்கள் அனைவருக்கும் புலிகள் ஏதாவது அறிவித்தல் கொடுக்கப்போகிறார்கள் அதனால்தான் தங்களையும் தனியாக அழைத்திருக்கிறார்கள் என நினைத்துப் போன முஸ்லிம்களுக்குத் தங்களை மட்டும் தனியாக யாழை விட்டு வெளியேறச் சொன்னது அதிர்ச்சியாக இருக்கவே சிலர் ஆஞ்சனேயரிடம் ,

ஏன் .. எதற்கு ?’’
‘’நாங்கள் செய்த தவறு என்ன, எதற்காக வெளியேற வேண்டும் ?
எனக் கேள்விகளை அடுக்க, கோபமான ஆஞ்சநேயர் தனது கைத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுடுகிறார். அதனை தொடர்ந்து மைதானத்தை சுற்றிவர காவலில் இருந்த அனைத்து புலி உறுப்பினர்களும் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க, மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் பதற்றத்தோடு அங்கிருந்து கலைந்துபோக தொடங்குகிறார்கள்……………………………………………………………………………………….
முஸ்லிம்கள் வசித்த பகுதி கலவர பூமியாகிக் கொண்டிருந்தது. ‘உடனடியாக அனைவரும் வெளியேறவும்’ என்கிற அறிவித்தல் ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. மேலதிகமாக ஆயுதம் தாங்கிய புலி உறுப்பினர்கள் வந்து வந்து முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதியான சோனக தெரு, ஓட்டுமடம் மற்றும் பொம்மைவெளி ஆகிய பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன..

இதில் பொம்மைவெளி பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் வறுமை நிலையில் குடிசைகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இருந்ததே இல்லை. அவர்களது பிரச்னை அன்றாட வாழ்க்கைப் பிரச்சனை மட்டுமே. சோனகத் தெருப் பகுதியிலேயே பெரும் பணக்கார முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பெரும் வர்த்தகர்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவர்களைப் புலிகள் கைது செய்துகொண்டு போய் விட்டிருந்தார்கள்.

முடிந்தளவு தங்கள் உடமைகளை எடுத்தபடி அணைத்து முஸ்லிம் மக்களும் வெளியேறிக் கொண்டிருந்த பிற்பகல் நேரத்தில் மீண்டும் ஒலிப்பெருக்கியில் ஓர் அறிவித்தல் வெளியானது. ‘’ யாழை விட்டு வெளியேறும் முஸ்லிம்கள் அனைவரும் யாழ் ஐந்து முச்சந்திக்கு வந்து சேரும்படியும் அனைவரையும் சோதனை செய்த பின்னரே அவர்கள் வெளியேறலாம், அதேநேரம் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஒரு வாகனம் மட்டுமே எடுத்துச் செல்லலாம், அதில் யாழை விட்டு வெளியேறும் மற்றவர்களையும் அழைத்துச் செல்லவேண்டும்’’ என்ற அறிவித்தல் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய புலி உறுப்பினர்கள் மக்கள் பொருட்களை எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, மாற்றுத் துணிகளை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ……………………………………………………………………..

சந்தியில் புலிகள் ஒரு சோதனை நிலையத்தை அமைத்திருந்தார்கள், சுமார் 15,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரண்டு வரிசைகளாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். கலீலின் பிளவுஸ் உணவகத்தினுள் புலிகள் அமர்ந்திருக்க, கலீல் வெளியே வரிசையில் நின்றிருந்தார்.

பெண்களை, பெண் புலிகள் சோதனையிட்டார்கள். சோதனை நிலையத்தில் சோதனை ஆரம்பமாகியது. ஒரு பெண்ணின் உடைப்பெட்டியை திறந்த புலி உறுப்பினர் ஒருவர், அதற்குள் இருந்த சேலைகளை எடுத்து நிலத்தில் விரித்தவன், ‘’ எல்லாரும் உங்களிட்டை இருக்கிற நகைகள் எல்லாத்தையுமே இதிலை போடவேணும், தனியாக்கள் 150 ரூபாவும் குடும்பங்கள் 500 ரூபாயும் மட்டுமே கொண்டு போகலாம், மிச்சம் எல்லாமே இங்கே போடவேணும், அதையும் மீறி யாராவது கொண்டுபோய்ச் சோதனையிலை பிடிபட்டால் தண்டனை பலமாயிருக்கும்’’ என்று அறிவித்தான்.

ஆரம்பத்தில் இந்த வெளியேற்றம் தற்காலிகமானதே என நினைத்த முஸ்லிம்களுக்குப் புலிகளின் புதுப் புது அறிவித்தல் கடுமையானதாக வெளியாகிக் கொண்டிருந்ததால் தாங்கள் நிரந்தரமாகவே தங்கள் மண்ணைவிட்டு வெளியேறப் போகிறோம் என்கிற கவலை, ஏதாவது கதைத்தால் கொல்லப்படலாம் என்ற மரணப் பயத்தில் கையாலாகாத் தனத்தோடும் பலியிடப்படப்போகும் ஆடுகளைப்போல் வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் முஸ்லிம் மக்களது உடமைகளைப் பொதிகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து உதறி சோதனை செய்து கொண்டிருந்ததில் சோதனை தாமதமாக வரிசை மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.

அன்றிரவுக்குள் அனைத்து முஸ்லிம்களும் யாழை விட்டு வெளியேறி வவுனியா நகரை தாண்டிவிட வேண்டும் எனத் தலைமை கட்டளையிட்டிருந்ததால், அத்தனை ஆயிரம் பேரின் உடமைகளையும் அன்றிரவுக்குள் பரிசோதனை செய்து முடித்து அவர்களை அனுப்பிவிட முடியாது என நினைத்த புலி உறுப்பினர்கள் திடீரென புதிதாக இன்னொரு அறிவித்தலை வெளியிட்டார்கள். அதாவது ஒரு மாற்றுத்துணியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அப்படியே வீதியோரத்தில் போட்டு வாருங்கள் என்பதே. தங்கள் மண்ணை இழந்து, இப்போ உடமைகளையும் இழந்து உடலில் உயிரை மட்டுமே தக்கவைக்க வேண்டிய நிலை………………………..

மாலை மூன்று மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது, மத்தியான சாப்பாட்டைக் குழந்தைகள் உள்பட எவருமே சாப்பிட்டுருக்கவில்லை. வீதியோரத்தில் இருந்த வீடுகளில் அவ்வப்போது புகுந்து தண்ணீரை குடித்துத் தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு மீண்டும் வரிசையில் வந்து நிற்க தொடங்கினார்கள். பல குழந்தைகளின் பசி அலறல் சத்தம் அடங்கி அவர்கள் தூங்கியிருந்தார்கள். …………………………………………….

புலிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் மிக நெருக்கமாக எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவுக்கு மக்களை விலங்குகளைப் போலவே அடைத்து ஏற்றிக் கொண்டிருந்தார்கள். …..சுமார் இரண்டாயிரம் பேரளவில் இறுதியாக வாகனங்கள் போதாமல் போகவே, ‘இரவாகி விட்டதால் தாங்கள் அங்கேயே தங்கியிருந்துவிட்டு மறுநாள் காலை யாழைவிட்டு போகிறோம்’ எனக் கேட்டுப் பார்த்தார்கள். இரவுக்குள் எல்லோருமே யாழ்குடாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு, எனவே யாழில் யாரும் தங்க முடியாது எனவே வாகனங்கள் கிடைக்காதவர்கள் நடந்து போய் விடுங்கள்’’ என்று கடுமையான உத்தரவு மட்டுமே வந்தது.

அதனால் மிகுதியாக இருந்தவர்கள் அனைவரும் நடையாக வந்து அன்றிரவு சாவகச்சேரி சந்தைப் பகுதியில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் வவுனியா நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள்.

முஸ்லிம்கள் யாழில் இருந்து வெளியேற்றப்பட்டு வவுனியா வருவதை அறிந்த இலங்கையரசு அதனை தனக்கு சாதகமாக்க முடிவெடுத்து வவுனியா வருபவர்கள் அனைவருக்கும் அவசர அவசரமாக தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் ராணுவத்தைக் கொண்டு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். யாழில் இருந்து வெறுங்கைகளோடு வெளியேறி வந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் ஆறுதலாக இருந்தது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அன்றிரவு தங்கிருந்த அனைவரும் மறுநாள் காலை புத்தளம் நோக்கிய பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்………. கலாம் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த தன் தாயார் ஆயிஷாவை எழுப்பினார், அவர் ஆவி பிரிந்து விட்டிருந்தது, ………………………………………………………………………………………… அதேநேரம் பயணத்தை தொடர்வதற்காக வாகனங்கள் தயாராகி கோண் அடித்தபடி இருந்தார்கள். அழுது கொண்டிருப்பதற்கான அவகாசங்கள் இப்போது இல்லை, எனவே அங்கேயே காரியங்களை வேகமாக முடித்துவிட்டு பயணத்தை தொடரச் சொல்லி பலரும் கலாமின் குடும்பத்தினருக்கு ஆலோசனை சொன்னார்கள். அங்கேயே பூந்தோட்டம் குளத்துக்கு அருகே சிலர் ஒரு குழியை வெட்டினார்கள். கலாம் பல மாதங்கள் தன்னை தூக்கி சுமந்த தாயாரை அனைத்து தூக்கி தொழில் தாங்கியபடி கொண்டுபோய் குழியில் கிடத்தியபோதுதான் கவனித்தார், ஆயிசாவின் கைகள் அவரது சேலை தலைப்பினை இருக்கப் பிடித்தபடி மார்போடு அணைத்திருந்தது. இறுக்கப் பிடித்த கைகளை கொஞ்சம் பலத்தை பிரயோகித்து விரித்துச் சேலை தலைப்பை விடுவித்தவர் அதன் நுனியில் ஒரு முடிச்சு இருக்க, அதனை அவசர அவசரமாக அவிழ்த்துப் பார்த்தார், அதனுள் அவர், பாரம்பரியமாக அவரது முன்னோர்களும் அவரும் அவரது பிள்ளைகளும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த அவர் நேசித்த யாழ்ப்பாணத்து மண்ணை எடுத்து முடிந்து வைத்திருந்தார்…..

eye of the city

%d bloggers like this: