தபால் நிலையங்களுக்கு ஆவணங்களுடன் வருவோர் பேனா கொண்டு வரவும்

கொழும்பு: தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பொதுமக்களிடம் இக்கோரிக்கையை இன்று (30) முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 04ஆம் திகதி உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள தபால் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி பொதுமக்கள் முகக் கவசங்களை அணிந்து வருகை தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோன வைரஸ் தொற்று ஏற்படுமென்பதால், எந்தவொரு தபால் அலுவலங்களினாலும் பேனை வழங்கப்பட மாட்டாதெனவும், அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டதும் பொதுமக்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு, சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு ஆகிய சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

முன்னர் பொதுமக்களிடமிருந்து கையொப்பங்களை பெறுவதற்காக ஒரு படிவத்தை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பயன்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெவ்வேறு படிவங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அத்தோடு, பொதுமக்கள் தபால் அலுவலகங்களுக்கு வருகை தரும்போது ஒரு மீற்றர் இடைவெளியை பேண வேண்டுமென்பதோடு, சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a comment