பொதுஜன பெரமுனவினால் குண்டுத்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்மாதிபருக்கும் முறைப்பாட்டுக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். இது குறித்து நேற்று எரான் விக்கிரமரத்ன அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

‘அடுத்த வாரமளவில் குண்டுத்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் திட்டமிடப்படுகிறது என்ற நம்பத்தகுந்த தகவலொன்று கிடைத்துள்ளது. 

எனவே தயவுசெய்வு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்துங்கள்’ என்ற கருத்தொன்று டுவிட்டர் தளத்தில் எனக்கும், ஹரீன் பெர்னாண்டோவிற்கும், அஜித் பி பெரேராவிற்கும் பகிரங்கமாகக் பகிரப்பட்டிருக்கிறது.

இந்த எச்சரிக்கை 2019 ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பைக் கொண்டது என்று கருதுகின்றேன். எனவே இதுகுறித்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் அலுவலகத்திடம் கேட்டுக்கொள்வதுடன், உரிய அரச கட்டமைப்புக்களினாலும் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இக்கடிதத்தின் பிரதியொன்று பொலிஸ்மாதிபருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.