- முகமட் ஜலீஸ்
லண்டன்: பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் போல் வேடமிட்ட ஓர் நபருடன் அவரை விசாரணை செய்யும் விதத்தில் நகைச்சுவையான தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று 2019 கிரிக்கட் உலகக்கிண்ணத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. அபிநந்தனை விசாரணை செய்வது போல அமைந்த இக்காட்சியில் முதலாவது கேள்வியில்…
“நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள்” எனவும், இரண்டாவது கேள்வியில் “யார் யாரெல்லாம் விளையாடுவீர்கள்” எனவும் கேட்கப்படுகிறது. இவை இரண்டு கேள்விகளுக்கும் “எனக்கு எதுவும் கூறமுடியாது” என அவர் கூறுகிறார். பின்னர் “தேநீர் எப்படி இருக்கிறது” என கேட்கின்றனர். “நல்ல சுவையாக இருக்கிறது” என பதில்கூறி அவர் விடைபெறும்போது “கப் ஐ எதற்கு கொண்டுபோகிறாய் அத வச்சிட்டுப்போ” எனும் தொனியில் சொல்லப்படுகிறது. அது தேநீர் கப் அல்ல வேர்ல்ட் கப் எங்களுக்கே எனும் நோக்கில் வெளியிடப்பட்ட இக்காணொளி, சமூகவலைத்தளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஆத்திரமடைந்திருக்கின்றனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இதனால் மென்மேலும் முக்கியத்துவமாய் அமைகிறது.
உலகக்கிண்ண போட்டிகளில் இந்தியாவை வெற்றிபெற முடியாமல் வரலாறுபடைத்த பாகிஸ்தானியர்களை இலக்குவைத்து கடந்த 2015 உலகக் கிண்ணப்போட்டிகளின்போது “மோக்கா மோக்கா” நகைச்சுவை காணொளி ஒன்றை இந்திய கிரிக்கட் இரசிகர்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.