- முகமட் ஜலீஸ்
மன்செஸ்டர்: உலகக்கிண்ணம் 2019 இன் 22வது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்க முடியாமல் இருப்பது வரலாறாகவே இருக்கிறது. 1992 இல் இருந்து 2015 வரை 6 உலகக்கிண்ணப்போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றிருக்கிறது.
குறித்த இரு நாட்டு இரசிகர்களைவிடவும் உலக கிரிக்கட் இரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஓர் முக்கிய போட்டியாக இது அமைகிறது. இருபத்தாராயிரம் இருக்கைகளைக் கொண்ட ஓல்ட் ட்ரபேஃர்ட் மைதானம் 1864ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

போட்டி இடம்பெறும் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 17 செல்சியஸாக அமைகிறது. போட்டி ஆரம்பிக்கும் காலை நேரத்தில் இலேசானா வெயிலாகவும், பின்னர் மேகக்கூட்டங்களாகவும் காணப்படும் இம்மைதானம் பின்னர் பிற்பகல் 4 மணியிலிருந்து சிறு மழை பெய்யலாம் என உள்ளுர் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இப்போட்டிக்கு 7 இலட்சம் நுழைவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தாகவும், இம்முக்கிய போட்டியை 1.5 பில்லியன் மக்கள் பார்க்க இருப்பதாகவும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆதர் (51) தெரிவித்திருக்கிறார். 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியை 1.6 பில்லியன் மக்கள் பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 11,000 ஓட்டங்களைப் பெறுவதற்கு இன்னும் 57 ஓட்டங்களுக்காகக் காத்திருக்கிறார். இப்போட்டியில் அவர் இந்த இலக்கை அடைந்தால் 11,000 ஓட்டங்களைப்பெற்ற 9வது கிரிக்கட்டராக கால்பதிப்பார்.

கடந்த 1999 இல் இதே மைதானத்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண இந்தியா–பாகிஸ்தான் போட்டி நிறைவுக்குப்பின்னர் இரு தரப்பு இரசிகர்களும் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். இதனைக்கருத்திற்கொண்டு இப்போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2015 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வியைத்தழுவியவுடன் “மோக்கா..மோக்கா” பாடலை இந்திய இரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பரவிட்டு வேடிக்கை பார்த்தனர்.
ஞாயிறு இடம்பெறும் போட்டிக்காக ஏற்கனவே பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி “அபினனந்தன் கப்” விளம்பரத்தை வெளியிட்டு இந்தியாவை சீண்டிப்பார்த்திருக்கும் இத்தருணத்தில் இப்போட்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.