டெல்லி: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று வெளியாகும் செய்திக்கு இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் விளக்கம் அளித்துள்ளார். கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும்.

அதாவது இந்த வைரஸ் தாக்கிய நபர் எதை தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1886 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 72436 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த மோசமான வைரஸ் குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் பேட்டி அளித்துள்ளார். அதில், சீனாவில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு வைரஸ் தாக்கிய எல்லோருக்கும் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த மிக கடுமையான நேரத்தில் இந்தியா எங்களுடன் உடன் இருக்கிறது. இந்திய நண்பர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
சீன மருத்துவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இந்த வைரஸ் காரணமாக அங்கு மருத்துவர்கள் பலர் பலியாகி வருகிறார்கள் . சிகிச்சை அளிக்கும் போதே நோய் தாக்கி பலர் பலியாகி உள்ளனர். அவர்களின் செயல் மிகப்பெரியது. அவர்களின் தியாகம் அளப்பரியது. அவர்களை வார்த்தைகளால் பாராட்டவோ நன்றி தெரிவிக்கவோ முடியாது.
சீனாவில் இந்த வைரஸ் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். அதேபோல் மீன் மார்க்கெட்டில் இருந்து பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையில் எப்படி பரவியது என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது இயற்கையாக உருவானது. நாங்கள் உருவாக்கவில்லை என்பது மட்டும் உண்மை. வைரஸை விட வதந்தி மிக மோசமானதாக இருக்கிறது, என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் பேட்டி அளித்துள்ளார்