முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடை செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சமூகத்தில் எழுந்த பிரச்சனைகளுக்கு காரணமான 14 விடயங்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையிலான யோசனைகளை தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மலித் ஜயதிலக்க நேற்று முன்வைத்துள்ளார்.
இதேவேளை, இனங்கள் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்யும் வகையிலான சட்டமொன்றை உருவாக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இனங்கள் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்கள் மற்றும் யாப்பு ஆகியவற்றை மாற்றியமைக்க காலக்கேடு வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2 அல்லது 3 வருடங்களுக்குள் இனங்கள் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொள்ளாத அரசியல் கட்சியாக குறித்த கட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகள் புர்கா போன்ற முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை தடை செய்துள்ளதாக மலித் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நபரொருவர் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிந்திருக்கும் போது, அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, குறித்த நபர் அனுமதிக்காத பட்சத்தில் அவரை கைது செய்வதற்கான அதிகாரம் போலீஸாருக்கு வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதராசா பாடசாலைகள்
மேலும், 3 வருட காலத்திற்குள் மதராசா கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சாதாரண பாடசாலை கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அந்த குழுவின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
மதராசா பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு நிராகரித்துள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொது தராதர உயர் தரம் பரீட்சைகளின் பின்னர் மௌலவிமாருக்கான கல்விக்காக மாத்திரமே மதராசா பாடசாலைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த குழு யோசனை முன்வைத்துள்ளது.
இந்த மதராசா பாடசாலைகளின் கண்காணிப்புகளுக்காக முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்திற்கு கீழ், விசேட புத்திஜீவிகள் குழுவொன்று இயங்க வேண்டும் என அந்த யோசனையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களினால் பயிற்றுவிக்கப்படும் அனைத்து பாடத்திட்டங்களும் தேசிய கல்வி நிறுவனத்தின் அனுமதியின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில் அச்சிடப்படவுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் தொடர்பில் புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, ஆராயப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கல்வி தொடர்பில் மேலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள்
எதிர்வரும் காலங்களில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் இந்த குழு அவதானம் செலுத்தியுள்ளது.