கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரினால் தேடப்பட்டு வந்த குறித்த 6 பேரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை (25) ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

குண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்-National Thowheed Jamath 6 Terrorist Who were Searching Police Found

மொஹம்மட் சாதிக் அப்துல்ஹக், மொஹமட் சாஹித் அப்துல்ஹக்
அதற்கமைய, மொஹம்மட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல்ஹக் ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள் நாவலப்பிட்டிய பொலிசாரால், கம்பளையில் உள்ள பாதணி வர்த்தக நிலையமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மொஹமட் சாதிக் அப்துல்ஹக், மாவனல்லை புத்தர் சிலைகளை சேதப்படுத்தி தலைமறைவான பிரதான குற்றவாளிகளில் ஒருவராவார். கடந்த ஆண்டு புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான காணி ஒன்றை சுற்றிவளைத்த போது அங்கிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டது. இதனையடுத்தே மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இவர் தலைமறைவாகி இருந்தார்.

குண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்-National Thowheed Jamath 6 Terrorist Who were Searching Police Found

பாத்திமா லத்தீபா
பாதீமா லத்தீபா தேடப்பட்டு வந்த மொஹம்மட் சாதிக் அப்துல்ஹக்கின் மனைவியாவார்.

இவரை இவரது குழந்தையுடன் அவரது கணவரான மொஹம்மட் சாதிக் அப்துல்ஹக் நேற்றுமுன்தினம் (27) மாவனல்லையில் வைத்து விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் தனது தாயின் வீட்டுக்குச் சென்ற குறித்த பெண்ணை, அவரது பெற்றோர் பொறுப்பேற்க மறுத்துள்ளதுடன், அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் அவர், மாவனல்லை, முறுத்தவெலவிலுள்ள தனது கணவரின் வீட்டுக்கு சென்ற நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாத்திமா லத்தீபாவை கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை தாக்குதல் இடம்பெற்ற தினத்தில், தானும் இன்னும சிலரும் வெள்ளை உடை அணிந்து வந்ததை தமது விகாரையில் கண்டதாக அவரை தொலைக்காட்சிகளில் கண்ட பின்னர் அடையாளம் கண்டதாக ராஜகிரிய ஜயசேகராராமய விகாராதிபதி தெரிவித்துள்ளார். குறித்த பெண் அன்றைய தினம் தமது விகாரைக்கு வந்து, கழிப்பறை செல்வதற்கு அனுமதி கோரியதாகவும் தாம் போதனை செய்கின்ற இடத்திற்கு அருவில் அவர் ஒரு பையொன்றை வைத்து விட்டு கழிப்பறை சென்று சற்று நேரத்திற்கு பின்னர் அங்கு வந்து மீண்டும் குறித்த பையை எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ரில்வான்
சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் மற்றும் மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ரில்வான் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் மரணமடைந்துள்ளதாக பொலிசார் அனுமானிக்கின்றனர்.

மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ரில்வான் என்பவர் ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இருவரையும் அடையாளப்படுத்தும் வகையில், அவர்களது DNA பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த பெண் கடந்த 21 ஆம் திகதியான குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில், கிளிநொச்சியிலுள்ள தேவாலயத்தில் அவரை கண்டதாக குறித்த தேவாலயத்தின் மதகுருவான ஜேசுதாஸ் தெரிவித்தார்.

அன்றைய தினம் 5.40 மணிக்கு குறித்த தேவாலயத்திற்கு வந்ததாகவும், அன்று 7.30 மணிக்கு ஆராதனை இடம்பெற இருந்த நிலையில், அதிகாலை கதவை திறந்தபோது, அவர் உள்ளே நுழைந்ததாகவும், நீண்ட ஆடை அணிந்திருந்த அவரால் மண்டியிட்டு இருக்க முடியவில்லை எனவும் தன்னிடம் எதுவும் பேசாத அவர் பின்னர் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்-National Thowheed Jamath 6 Terrorist Who were Searching Police Found

அப்துல் காதர் பாத்திமா காதியா
ஆரம்பத்தில் புகைப்படம் மாறி பிரசுரிக்கப்பட்ட குறித்த பெண் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அவரது குழந்தையும் காயங்களுடன் உயிர் பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஸஹ்ரானின் மனைவி மற்றும அவர்களது குழந்தையை அவரது தங்கை மற்றும் மைத்துனர் ஆகியோர் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளதாக ருவன் குணசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் பொலிசாரால் தேடப்பட்டு வெடிகுண்டு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட படங்களில் வெளியிடப்பட்ட 6 பேரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சஹ்ரானின் மனைவியான பாத்திமான காதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றைய இருவரும் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது வரை 59 பேர் கைது; 44 பேர் CIDயில் 15 பேர் TIDயில்
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 59 பேர் செய்யப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர்களில் 44 பேர், குற்ற புலனாய்வு பிரிவில் (CID) விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, 15 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் (TID) வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

நன்றியுடன் தினகரன்