புதிய காத்தான்குடியின் முக்கியமான ஒரு பள்ளிவாசலில் ளுஹர் தொழுகை நேரம் கடைசி ரக்கத்தில் நாட்டுநிலைமையை கருத்திற்கொண்டு ஜம்மிய்யத்துல் உலமாவின் வழிகாட்டலுக்கினங்க குனூத் ஓதப்பட்டது, நான் உட்பட பலர் கவலையோடு அந்த பிரார்த்தனையில் ஈடுபட்ட போதும், அருகில் இருந்த ஒரு 15 வயது வாலிபன் குனூத்திற்கு கையேந்தாமல் தொழுகையை நிறைவேற்றினான்.
தொழுகை நிறைவு பெற்றதும் அவரை அணுகி தம்பி ஏன் குனூத் ஓதும்போது கையேந்தாமல் இருந்தீர்கள் என கேட்டேன், அதற்கு அந்த வாலிபன் “நான் குனூத் ஒதுவதில்லை, அது கூடாது என்று கூறினான், என்ன காரணம் என்று கேட்டேன் அது பற்றி எனக்குதெரியாது என்றான், தற்போது ளுஹர் தொழுகையில் ஓதப்பட்ட குனூத்திற்கும் சுபஹ் தொழுகையில் வழக்கமாக ஓதப்படும்
குனூத்திற்கும் வித்தியாசம் தெரியுமா என கேட்டேன் அதைப்பற்றியும் தனக்குதெரியாது ஆனால் குனூத் ஓதுவது கூடாது என்று நான் செல்லும் ஜூம்மா பள்ளியில் ஜூம்மாவில் உபதேசித்ததை கேட்டுள்ளேன் என குறிப்பிட்டான் மேலும் தன் சகோதரர் இவ்வாறுதான் நடந்து கொள்வார் அதைப்பார்த்து நானும் நடந்து கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்”
அதன்பிறகு சிலமணிநேரம் அவருக்கு வழங்கப்பட்ட விளக்கங்களை தொடர்ந்து தெளிவு பெற்றுக்கொண்டதுடன் இதுவரை இப்படியான தெளிவு எனக்கு கிடைக்கப்படவில்லை என வேதனைப்பட்டுக்கொண்டார்.
குனூத் ஓதுவது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருக்கட்டும்
இப்படியான ஒரு சிறிய நிகழ்வை எம்சமூகத்தின் ஒரு புரியலுக்காகவே பதிவு செய்தேன்.

குனூத்/கூட்டு துஆ போன்ற கருத்து வேறுபாடுள்ள விடயங்களை ஒருபுறம் வைத்தாலும்
மார்க்கத்தின் பெயரால் மத்ஹபுகள் அற்ற குர்ஆன் ஹதீஸ் என்ற சிந்தனைப்பிரிவில் இருந்து கொண்டு
தன்னை தற்கொலை செய்து நாட்டை அழிக்க தயாராகும் நாசகாரிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டார்கள்???
குர்ஆன் வசனத்துக்கு தவறான விளக்கத்தை வழங்கி சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறி மூளை சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டம் வளர காரணம் என்ன போன்ற பல கேள்விகள் எம் முன்னால் தேங்கி நிற்கின்றன!!!
இதற்கெல்லாம் பல காரணிகள் பதில்களை
நாம் முன்வைக்க முடியுமாயினும் குறிப்பாக இந்த தீவிர சிந்தனை பரவும் போது அதற்கு எதிராக தெளிவுகளை வழங்கத்தவறிய உலமாக்கள்/அறிஞர்கள்/மஸ்ஜித் மற்றும் ஊர் தலைமைகளின் தவறை சுட்டிக்காட்டி புத்துணர்வூட்டவே இந்த ஆக்கம்
உலமாக்களேதலைவர்களே! மேலும் பொறுப்புதாரிளே!!!
NTJ ஸ்தாபகர் தீவிரவாதி ஸஹ்ரான் பற்றியும் அதை சார்ந்த தௌஹீத் வாதிகளின் கடந்த கால தீவிர போக்குகளும் அறியாத காத்தான்குடி மக்கள் யாரும் இருக்கமுடியாது.(அகீதாவில் முரண்பட்ட அப்துர் ரஊப் மௌலவிக்கு எதிரான பிரச்சாரம்-அதைவைத்தே பல நடுநிலைவாதிகளும் ஸஹ்ரானுக்கு பின்னால் மாட்டிக்கொண்டனர் என்பது ஒருபுறமிருக்க)
மார்க்கத்தின் பெயரால் தௌஹீத் வாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களின் கொள்கைக்கு மாற்றமானவர்களை (குறிப்பாக குனூத் கூட்டு துஆ கூடாது /சர்வதேச பிறைக்கு மாற்றமானவர்கள் வழிகேடர்களாக சித்தரித்துக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அறிவோம்.
அந்த அளவுக்கு அவர்களின் பிரச்சாரம் தீவிரமாக இருந்த போதும் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய யாரும் முன்வர முடியாமைக்கு சில பொருத்தமான காரணங்கள் இருந்தாலும்,அல்லது அந்த தலைப்புக்கள் சில்லறைப்பிரச்சினைகள் என உலமாக்கள் ஒதுங்கி இருந்தாலும்,
ஸஹ்ரான் தலைமறைவாகிய பின்னர் NTJஇனால் 2017 அவர் நீக்கப்பட்டதாக அறிக்கை இட்டபின்னர் அவர் முகநூல் வழியாக பகிரங்கமாக தீவிரவாத மற்றும் ஷரீயாவிற்கு முற்றிலும் மாறுபாடான தாக்குதல் தொடர்பாக கருத்துக்களை பகிரங்கமாக பிரச்சாரம்செய்யும் போது அதற்கு எதிராக எந்த உலமாக்களும், அறிஞர்களும் உடனுக்குடன் சமூகத்திற்குதெளிவு கொடுக்காததை ஒருவகையில் முஸ்லீம் தலைமைகள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குர்ஆன் ஹதீஸுக்கு தவறான விளக்கம்கொடுக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டு தன்னை தற்கொலைக்கு தயாராக்கி இருக்கும் வாலிபர்களின் சீரழிவிற்கு உலமாக்களும் பதில் கூறியே தீர வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய சூழலில் அகிலஇலங்கைஜம்மிய்யத்துல் உலமாவின் அழகான வழிகாட்டலை அர்ப்பணிப்பை இலங்கை முஸ்லீம்கள் பாராட்டி வரவேற்றாலும் அவர்கள் கூட இந்த குறித்த தீவிரவாதிகளின் விடயத்தில் இவர்ககளின் தீவிர வாத வழிகெட்ட சிந்தனை பரப்பப்படும் போது இது தொடர்பாக குறித்த பிரச்சாரகர் ஸஹ்ரான் பற்றி பொலீசுக்கு கைது செய்ய சிபாரிசுசள் மேற்கொண்டபோதும் பரப்பப்பட்ட தீவிரவாத வழிகெட்ட கருத்துக்களுக்கு எதிராக தெளிவுகளையும், மார்க்க அறிவையும் சமூகத்திற்கு / இளைஞர்களுக்கு வழங்க தவறியமை ஏற்றுக் கொள்ளத்தான்வேண்டும்.
இதில் முக்கிய விடயம் யாதெனில் குழப்பவாதிகளோடு தர்கித்து என்ன பயன் என்று ஒதுங்கியிருந்த நடுநிலை உலமாக்கள் ஒருபுறம் இருக்க, குர்ஆன் ஹதீஸ் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு
கண்டவர்களையெல்லாம் முர்தத்களாக ஆக்கிக் கொண்டு கண்டதுக்கெல்லாம் பத்வாக்களையும் அள்ளிவீசிக்கொண்டிருந்த காத்தான்குடி தௌஹீத் இயக்கங்களான (ACTJ சார்ந்த தாருல் அதர் அத்தவிய்யா/KUBA நிர்வாகம்/ SLTJ/CTJ) போன்றவர்கள்கூட மௌனிகளாக இருந்து விட்டு தற்போது (தம் இருப்பை தக்கவைத்துக்கொள்ள என்னவோ-அல்லாஹ் அறிந்தவன்)தாக்குதலுக்கு எதிராக கண்டன அறிக்கைககளை பறக்கவிட்டுள்ளனர்.
கண்ணியமானஉலமாக்களே! அறிஞர்களே! தலைமைகளே!
இனிமேலாவது தீவிர போக்குடையோரை கண்டும் காணாமல் புறக்கணித்து விடாது உங்கள் அமானிதத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடக்க முயல்வோம்.
மஸ்ஜித் தலைமைகளே!நிர்வாகிகளே!
தீவிரபோக்குடையோருக்கு அஞ்ஞிக்கொண்டிருக்காமல் அல்லாஹ்விற்கு பயந்து தீவிர சிந்தனைப்பிரிவுகளுக்கெதிராக மஸ்ஜிதில் தீர்மானங்களை கொண்டு வாருங்கள், அழகான மார்க்கத்தை அழகாக எத்தி வைக்க உலமாக்கள் தைரியமாக முன்வாருங்கள், தீவிர சிந்தனைக்கு எதிராக தைரியமாக பதில் கொடுங்கள்.
“வெள்ளம் வருமுன் அணை கட்ட தவற விட்டாலும் இன்ஷா அல்லாஹ் வந்த வெள்ளம் தலைக்கு மேல் செல்ல முன்னராவது உணர்வு பெறுவோம்”
அழகான மார்க்கத்தை பற்றிய கேவலமாக சித்தரித்து விட்டுச்சென்ற நாசகார செயல் பற்றிய வடு மாற்று மதத்தவரின் உள்ளத்தில் இருந்து அழிய எவ்வளவு காலம் செல்லுமோ!
-அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக,எம் தவறுகளை மன்னிப்பானாக
(இவர்களின் இந்த நாசகாரசெயலால் தன் கண்ணியமான /பக்குவமாக/இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ வழிவகுத்த நிகாப்புடைய ஆடையை அணிந்து செல்ல முடியாமல் உள்ளத்தால் வேதனைப்படும் கண்ணியமான /பக்குவமான /இறை நேசப் பெண்களின் உள்ளத்தின் வேதனைகள் ,சாபங்கள் இந்த நாசகாரிகளை ஒருபோதும் விட்டு வைக்காது)
– புதிய காத்தான்குடியிலிருந்து அப்துல்லாஹ்YKK