கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்
நியாயமான விசாரணைகளை
முன்னெடுப்பதுடன், அதன் உண்மையான
விபரங்களை தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு
மாபெரும் அமைதிவழி போராட்டமொன்றை
முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது
தொடர்பில் அரசாங்கத்திற்கும் , சர்வதேச
நாடுகளுக்கும் தெரிவிப்பதற்காக எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி பூஜைக்கு
வருகைத்தரும் அனைவரையும் கருப்பு
நிறத்திலான ஆடை அணிந்து வருமாறு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற
உறுப்பினர் நிரோசன் பெரேரா வேண்டுகொள்
விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று
செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர், மேலும்
கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல்
சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு வருடகாலம்
பூர்த்தியடையவுள்ளது. இந்த தாக்குதல்
தொடர்பில் நியாயமான முறையில்
விசாரணைகளை முன்னெடுத்து , அதன்
பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகளையும் ,
தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையை
எடுக்காதவர்களையும் அடையாளம் கண்டு
அவர்களுக்கு தண்டனை பெற்றுக்
கொடுக்குமாறே நாம் கோரிக்கை விடுத்து
வந்தோம். எனினும் இதுவரையில் அத்தகைய
எந்த தகவல்களும் கண்டறியப்படவில்லை
என்பதை நாட்டு மக்களும் அறிவார்கள்.
இதுத்தொடர்பில் உடனே விசாரணைகளை
முன்னெடுத்து நியாயத்தை பெற்றுக்
கொடுப்பதாக தெரிவித்து ஆட்சிக்குவந்தவர்கள் தற்போது அதனை,
மறைக்க முயற்சித்து வருகின்றனர்.
இவர்களது
செயற்பாடுகள் தொடர்பில் கத்தோலிக்கச்
சபையும் புரிந்துக் கொண்டுள்ளது. அதனால்
எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கத்தோலிக்க மக்கள் அனைவரும் கருப்பு நிற
உடை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.
இந்த அமைதிவழி போராட்டமானது
அண்மையில் இடம்பெற்ற பாரிய
போராட்டமாகவும் இடம்பிடிக்கலாம். இதற்கு
நாம் ஒத்துழைப்பு வழங்குவதுடன் , அதனூடாக
அரசியல் செய்ய முயற்சிக்கமாட்டோம்.
அதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
திருப்பள்ளிக்கு வருகைத் தருபவர்கள்
அனைவரும் கருப்பு நிறத்திலான ஆடைகளை
அணிந்து வாருங்கள். இதனூடாக நாட்டுக்குள்
மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் எமது
கோரிக்கையை தெரியப்படுத்த முடியும்.
எதற்குமே வர்த்தமானி அறிவித்தலை
வெளியிட்டுவரும் அரசாங்கம் , கறுப்பு நிற ஆடைக்கு தடை விதிக்கும் வர்த்தமானியை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை