கொழும்பு: ஜும்ஆ மற்றும் ஐவேளை
கூட்டுத்தொழுகைகளுக்கு ஒரே நேரத்தில்
நூறுபேர் வரை கலந்துகொள்ள சுகாதார
அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள்
அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விசேட
வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள
கடிதத்திலேயே மேற்கண்ட அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சுகாதார அமைச்சு
அனுப்பியுள்ள கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன
விடுத்த வேண்டுகோளுக்கமைய, முஸ்லிம்
பள்ளிவாசல்களில் கூட்டு வழிபாடுகளில்
ஈடுபடும்போது ஒரே நேரத்தில் 100 பேர்வரை
கலந்துகொள்ளலாம்.

இதன்போது கொவிட்19 பரவுவதை தடுக்கும்
நோக்கில் சுகாதார அமைச்சினால்
விடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை
வழிபாட்டுக்கு வருபவர்கள் கட்டாயம்
பின்பற்றவேண்டும்.


குறிப்பாக முகக்கவசம் அணிதல்,
நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் தூர
இடைவெளியை பேணுதல் மற்றும் இதற்கு
முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதார
விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட
வேண்டும்.


முன்னதாக பள்ளிவாசல்களில் ஐவேளை
ஜமாஅத் உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகள்
மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகியவற்றில்
ஆட்களிடையே ஒரு மீற்றர் இடைவெளி பேணி
ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி
வழங்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.