கண்டி: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மதத்தையோ அல்லது இனத்தையோ தொடர்புபடுத்தத் தேவையில்லை எனத் வலியுறுத்திய அஸ்கிரியபீடம் இறுதி சடங்குகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை தெரிவித்துள்ளதே தவிர அது கட்டளையல்ல என்றும் குறிப்பிட்டது.

இறுதி சடங்குகள் குறித்த உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் மேலும் கூறுகையில் , கொரோனா வைரஸானது இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியுள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத விழுமியங்களைப் பின்பற்றுவதை விட சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதே பொறுத்தமானதாக இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அவை தொடர்பில் ஆராயந்து அறிக்கை அல்லது ஆலோசனை வெளியிடப்படும். எனினும் அது கட்டளையல்ல. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் சுகாதாரத்துறையினருக்கு மாத்திரமே உள்ளது
மேலும் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பௌத்த மதத்தைச் சேர்ந்த எவரேனும் உயிரிழந்தால் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதி சடங்குகளை முன்னெடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கின்றோம். எனவே இவ்விடயத்தில் இனத்தையோ அல்லது மதத்தையோ தொடர்ப்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது. மத நம்பிக்கை என்பது அனைவருக்கும் காணப்படுகிறது. எனினும் இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இறைவனை மனதில் நினைத்து நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது. காரணம் இந்த வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு இது வரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அதன் அபாயகரத் தன்மையை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.