அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை: பொது மக்களுக்களின் முறைப்பாடுகளை ஒன்லைன் மூலம் பெற்று, அவற்றுக்கு விரைவாக தீர்வு வழங்குகின்ற ஒரு பொறிமுறையை கல்முனை மாநகர சபையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.றகீப் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை விரைவுபடுத்துவதற்கானமங்கிவ்வாஎனும் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை (08) மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த இக்கருத்தரங்கில்குபைரா.ரி.பார்க்நிறுவனத்தின் பணிப்பாளர் சொஹான் குலசூரிய வளவாளராக கலந்து கொண்டு, குறித்த மென்பொருள் தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றினார்.

அங்கு முதல்வர் .எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;

இன்றைய நவீன உலகில் மக்கள் தமது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் எதிர்பார்க்கும் சேவைகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளக்க்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களினால் நிறைவேற்றப்பட வேண்டிய குறைபாடுகளையும் தேவைகளையும் ஒன்லைன் மூலம் முறைப்பாடு செய்து, அவற்றுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகமங்கிவ்வாஎனும் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தைகுபைராஎனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கம்பஹா மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளில் இப்பொறிமுறைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் ஊடாக மக்களின் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் ஒன்லைனில் பெறப்பட்டு, அவற்றை விரைவாக நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை அவர்கள் வெற்றிகரமமாக செயற்படுத்தி வருகின்றனர்.

இத்திட்டத்தை கல்முனை மாநகர சபையிலும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதன் முதற்கட்டமாகவே குறித்த பொறிமுறை தொடர்பில் மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கமளிப்பதற்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.