8வது பாராளுமன்றம் நெடுங்காலம் நீடிக்காது!

  • ஏ. அப்துல் ஹமீட்

parliament[1]கொழும்பு: பலத்த இழுபறிகளுக்கும், பேரம் பேசுதல்களுக்குமிடையில் தற்பொழுது நிறைவடைந்திருக்கும் முழு, அரை அமைச்சு நியமனங்களுக்குப் பின்னர் ,அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் முழு மனதுடனும், அரை அமைச்சைப் பெற்றவர்கள் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத நிலையிலும் பாராளுமன்றத்தில் தற்பொழுது காலை ஊன்றியிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள்:

தேர்தல் காலங்களில் ஒரே இனமாக இருந்தாலும், ஒரே ஊராக இருந்தாலும், கட்சிக்காக அடுத்தவனின் மாமிசத்தை சூறையாடிப் புசித்து, தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் எதிராகளாக தூற்றிய அரசியல்வாதிகள், அமைச்சுப் பதவிகள் கிடைத்ததன் பின்னர், ‘ நாங்கள் கட்சி பேதங்களை மறந்து சமூகத்துக்காக ஒன்றினைவோம்’ என வழமை போன்று உளர ஆரம்பித்திருக்கின்றனர்.

இனி அவர்கள் குசியாக பாராளுமன்ற சுகங்களை அனுபவிப்பார்கள்.

பொதுமக்கள்:

தனது வீட்டில் சுப்ஹூத் தொழுகைக்கு விளக்கு (லைட்) எறியாவிட்டாலும் கதவைத் தட்டி எழுப்பும் அயல்வீட்டுக் காரனும், தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் கூறியவுடன் பதில் சொல்ல மறவாத எதிர்வீட்டுக்காரனும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரனும், உத்தம நண்பனும் இத்தகைய சந்தர்ப்ப அரசியல்வாதிகளால் பின்னிப்பணைந்திருந்த உறவு, தேர்தலில் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் ஒற்றுமையாக இருப்பதானால் யாராவது வீட்டில் மரணம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே அரசியல் பகை ஒவ்வொரு சமூகத்திலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிருப்திக்குள்ளான பாராளுமன்றமும் அமைச்சரவையும்:
(சுருக்கமாக விளக்கப்படுகிறது)

நடைபெற்று முடிந்த பாராளுமன்றம் 50:50 பலத்துடன் சமநிலையில் இருக்கிறது. கூட்டணி இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது. மைத்திரியும், சந்திரிக்காவும் இல்லையென்றால் ஐ.தே.க. ஆட்சிக் கனவு குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருக்கும்.

தேர்தலில் தோற்றவர்களும் தேசியப்பட்டியல் ரீதியில் பாராளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தேசியப்பட்டியல் தேர்வு மோசடிக்காக நீதிமன்றத்தில் வழக்கு வைக்கப்பட்டுள்ளது.

30 அமைச்சர்கள் என்று கூறிய நல்லாட்சி இன்று மொத்த உறுப்பினர்களுள் அரைவாசியை தொட்டுவிடும் என்ற உலக அதிசயத்துக்காகக் காத்திருக்கிறது.

எதிர்க்கட்சிப் பதவி தனக்குத்தான் வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பிடிவாதமாக இருக்கிறது.

உலகை ஆள ஆசைப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், மஹிந்தவின் செல்வப் புத்திரன் நாமல் ராஜபக்ஸவும் அனாதைகள் போன்று சிவப்புச் சால்வையுடன் , வைத்தகண் வாங்காமல் கலையப்போகும் பாராளுமன்றத்தை உள்நோக்கி இருக்கின்றனர்.

கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரால் கொள்ளையடித்தவர்களும், வடக்கில் அகதிகளின் காணிகளையும், அபிவிருத்தி என்ற பெயரிலும் கொள்ளையடித்தவர்களும், மேற்கில் வீதி அபிவிருத்தி, மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்களும் ஆளுங்கூட்டணியில் நிறையவே இருக்கின்றனர்.

குடும்ப ஆட்சி மாற்றத்தை இந்நாட்டில் தகர்த்தெறிய ஆலோசனை வழங்கி, செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்காவும் இந்த பாராளுமன்ற அமைச்சரவை தனக்கு திருப்தியளிக்கவிலை என தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் வாய்திறந்து கதைக்க முடியாது. நடவடிக்கை மந்தமாகவே இடம்பெறும். (அமைச்சுப் பதவிகள் பேச விடாது)

ஊழல், மோசடி ஆளுங் கூட்டணியில் இடம்பெற்றால் தட்டிக்கேட்க பலமிக்க எதிர்க்கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் இல்லை.

அத்தியவசியப் பொருட்களின் விலை மலைபோல் ஏறப்போகிறது.

கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் பாராளுமன்ற ஆசனத்தில் பதவி இல்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கின்றனர்.

பார்ப்பதற்கு இவர்கள் லாயிக்கில்லாதவர்கள் போல் தெரிந்தாலும், பாராளுமன்றத்தை ஆட்டங்கான வைக்கும் துரும்புச் சீட்டு இவர்களிடமேதான் இருக்கிறது.

இவர்கள்தான் பாராளுமன்றத்தை விரைவில் கலைக்க பேரம் பேசப்படக்கூடியவர்களாக இருப்பர்.

இவ்வாறு பல ஓட்டை உடைசல்களுடன் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தப்பாராளுமன்றம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என கொழும்பு அரசியல் வட்டாரத்துக்குள் தற்பொழுது செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

விரைவில் இந்தக் கசிவு உடைபட்டு ஆறுபோல் ஓடப்போகிறது… மீண்டுமொரு தேர்தலுக்கு!!

யுவர்காத்தான்குடிக்காக கொழும்பிலிருந்து ஏ. அப்துல் ஹமீட்

Published by

Leave a comment