பத்ரிய்யாவுக்குள் சலசலப்பு..?

ntj hizbullahகாத்தான்குடி: எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காத்தான்குடியில் (மட்டு மாவட்டத்தில்) போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடன், காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் மார்க்க விடய ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் செய்திருந்தது. அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் நிபந்தனைகளுடனான கடிதத்தினை வழங்கி இருந்தது.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பின்னர், தற்பொழுது காத்தான்குடி-5, பத்ரிய்யா வட்டாரத்துக்குள் சில சலசலப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கிடையில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் காத்தான்குடியில் இயங்கும் சில தௌஹீத் இயக்கங்களைச் சந்தித்து, இத்தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இத்தகைய தௌஹீத் இயக்கங்களைச் சந்தித்த அவ்வேளைகளில்கூட எவ்வித எதிர்வினைகளும் எழாத பத்ரிய்யா வட்டாரத்துக்குள் தற்பொழுது ‘புகை’ கிளம்பியுள்ளது.

ntj hizbullah

தங்களது பரம விரோதிகளாகக் கருதும் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன், தங்களது அரசியல் பிதா எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பின்னர், மௌலவி அப்துர் ரஊப் தரப்புக்குள் அரசியல் முரண்பாடுகளும், அதிருப்திகளும் ஏற்பட்டிருக்கின்றன.

முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மர்ஹூம். எம்.எச்.எம். அஸ்ரப் 1988-89 இல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவுடன் செய்துகொண்ட (மறைமுக-சொகுசு) ஒப்பந்த வழிகாட்டலில் இருந்து இன்றுவரைக்கும் முஸ்லிம் தலைவர்களின் அரசியல் ஒப்பந்தங்கள் எதுவும் பகிரங்கத்திற்கு வருவதில்லை.

ஆனால், தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முழுவதுமாகப் பதிவேற்றப்பட்டிருந்ததுடன், சமூகவலைத்தளங்களிலும் அவ்வொப்பந்தத்தின் பிரதிகள் தற்போது பயனாளர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டும் வருகின்றன.

அவ்வொப்பந்தத்தின் பல நிபந்தனைகள் மௌலவி அப்துர் ரஊப் தரப்பை அதிகமாத் தாக்கி எழுதப்பட்டிருந்தன.

இந்தச் சலசலப்பின் பின்னர், முகநூலில் அப்துர் ரஊப் மௌலவியின் ஆதரவாளர்கள் கொதித்தெழும்புகின்றனர். இதன்மூலம் இவ்வொப்பந்தம் தங்கள் தரப்பை அதிகமாகப் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதை வெளிப்படையாகவே அறியமுடிகிறது.

இந்நிலையில், சுமார் 3000 வாக்குகளை தன்னகத்தை கொண்டுள்ள மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர், தற்பொழுது தளம்பல் நிலையில் இருக்கின்றனர். இவர்களை அமைதிப்படுத்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அதிகப் பிரயத்தனம் எடுக்க வேண்டடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

hizbullah abdur rauff

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, மகிந்தவுக்கு வாக்களிக்கும் விடயத்தில் மௌலவி தரப்புக்குள் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. இதன் காரணமாக வெளியூரில் தொழில்புரியும் மௌவியின் பிரதான ஆதரவாளர்கள் பலர் வாக்களிக்க ஊருக்கு வரவில்லை.

1970களில் இருந்து ஐ.தே.கட்சிக்கு ஆதரவளித்துவந்த மௌலவி அப்துர் ரஊப் மற்றும் அவரது நெருங்கியவர்களும், 2006ம் ஆண்டிலிருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் சரிந்துகிடக்கும் தனது வாக்குவங்கியை உயர்த்திக்கொள்ள அதிக தியாகங்களையும், செலவுகளையும் செய்து செய்துவரும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, மௌலவி அப்துர் ரஊப் தரப்பின் வாக்கு வங்கி இன்றியமையாதது.

தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செய்துகொண்ட ஒப்பந்தம் நிலைக்குமா அல்லது செல்லாக்காசாகுமா என்பது விரைவில் தெளிவுபடும்!

  • யுவர்காத்தான்குடிக்காக சுபானி றிபாயி

Published by

Leave a comment