![RISHATH[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/rishath1.jpg?w=133&h=150)
கொழும்பு: இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளோ, தீவிரவாத குழுக்களோ இருப்பதாக செய்யப்படும் உள்நோக்கத்துடனான பொய்பிரச்சாரத்தை மறுப்பதாகவும் கண்டிப்பதாகவும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இலங்கை அரசில் இருக்கும் ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் (ரவுப் ஹக்கீம், ஏ எச் எம் ஃபௌசி, ரிஷாத் பதியுதீன், பஷீர் ஷேகு தாவூத், ஏ எல் எம் அதாவுல்லா) இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக சிலதரப்பாரால் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லீம்கள் பல நூற்றாண்டுகளாக தமது தாய்நாடான இலங்கையில் அமைதியாகயும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதாகவும், இலங்கை என்கிற தம் தாய்நாட்டின் நில அடிப்படையிலான ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்கும் பணியில் தமது பங்கை தொடர்ந்து ஆற்றிவந்திருப்பதாகவும் அவர்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கை முஸ்லீம்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட இனத்துவேஷத்துடனான திட்டமிட்ட தாக்குதல்களில் இருந்து இலங்கை முஸ்லீம் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வெளியே வரத்துவங்கியிருக்கும் சூழலில், இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக சிலதரப்பாரால் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருப்பதாகவும், இலங்கை முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை தாம் கடுமையாக மறுப்பதுடன், வன்மையாக கண்டிப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறாரகள்.


![Athaullah[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/athaullah1.jpg?w=109&h=150)
Leave a comment