– அவதானி
காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இறுதியாக கடந்த வாரம் இடம்பெற்ற வட மாகாணசபையில் தனது கட்சி சார்பாக ஒருவரை நியமித்து தமிழரசுக் கட்சியுடன் கூட்டமைத்து போட்டியிட்டிருந்தது. எனினும் எதிர்பாராத தோல்வியைத் தழுவியுள்ள தமது பிரதிநிதிக்கு எப்படியாவது போனஸ் ஆசனத்தில் வட மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்க அதிக பிரயத்தனங்கள் எடுத்த போதிலும், இறுதியாக இந்த கூட்டமைப்பு அரசியல் எவ்வளவு பலனை தங்களுக்குக் கற்றுத் தந்துள்ளது என்பதை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தற்பொழுது சிந்தித்து வருவது கண்கூடு!
வடமாகாணசபை முதலமைச்சர் நியமனத்தையடுத்து விரைவில் ஒன்றுகூட இருக்கும் நிலையில், இரண்டு போனஸ் ஆசனத்துக்கு பலர் போட்டியில் இருப்பதும் மற்றுமொரு உண்மை. இவற்றில் அஷ்செய்ஹ் அஸ்மின் அவர்களுக்கும் சுழற்சி முறையில் ஒருவருடம் வடமாகாணசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கினாலும், ஒரே ஒரு வருடம் மாத்திரமே அவரால் அந்த சபையில் தனது செல்வாக்கைச் செலுத்த முடியும்.
நிற்க!
காத்தான்குடியில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை நோக்கி உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி என்ற ஓர் குறுகிய அரசியல் வட்டத்துக்குள் தங்களது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த காலத்தில் ஓர் பிரதான எதிர்க்கட்சியாக காத்தான்குடியில் திகழ்ந்திருந்ததுடன், ஓர் தனித்துவமும் இக்கட்சிக்கு இருந்தது.
எனினும் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் காத்தான்குடிக்கு வெளியில் தங்களது அரசியல் காலூன்றலை முன்வைக்கப்போய் பின்னர் சொந்த மண்ணில் மூக்குடைக்கப்பட்ட நிலையை மறக்க முடியாது.
குறுகிய வளங்களுடன், குறுகிய உறுப்பினர்களுடன் இயங்கி காத்தான்குடியில் அரசியல் களம் பதித்து வந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், சொந்த ஊரில் தற்பொழுது அநாதையாகி வரும் நிலைமையைக் காண முடிகிறது.
அப்பியாசக் கொப்பி வழங்கள், பொருத்துக்கல் வீதியமைத்தல், உணவு முத்திரைகள் மற்றும் ஏனைய உதவி, கல்வி சேவைகள் அனைத்தும், தற்பொழுது தனது கட்சியின் பரந்த சிந்தனையால் மறக்கப்பட்டுள்ளதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது.
காத்தான்குடியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கடந்த நகரசபைத் தேர்தலில் ஓர் ஆட்டம் கண்டதுடன், மாகாணசபைத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவி இருந்தது.
அதிகளவான மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து வளர்ந்துவந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், தனது பரந்த அரசியல் கொள்கையின் காரணமாக, இன்று சொந்த ஊரில் இருக்கும் ஆதரவுகளையும் இழந்துவிடும் அபாயம் எதிர்காலத்தில் இக்கட்சிக்கு இருக்கின்றது.
தனது சொந்த ஊரின் நகரசபையைக் கைப்பற்றும் அளவுக்கு முடியாத நல்லாட்சி இயக்கத்தால், எவ்வாறு வெளிப் பிரதேசங்களில் தனது அரசியல் காலூன்றல்களை நிலைநிறுத்த முடியும் என்பதாக ஊர்மக்கள் கேட்கின்றதில் பல நியாயங்கள் இருக்கின்றன.
வருடத்தில் ஓர் இப்தாரை ஏற்பாடு செய்து கலைந்துவிடும் அளவுக்குத்தான் இன்றைக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் களம் இருப்பதாக அரசியல் அவதானிகள் ஊரில் கூறிக்கொள்வதையும் காணமுடிகிறது.
Leave a reply to மம்தும் முகம்மட் Cancel reply