கொழும்பு: கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையரில் இதுவரை 45,509 பேர் நாடு திரும்பியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேலும் 58 ஆயிரத்து 892 பேர் நாடு திரும்புவதற்கு காத்திருப்பதாகவும் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள தூதுவராலயங்களில் தம்மைப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி முதல் நவம்பர் 31ஆம் திகதி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையரின் தொகை 33 ஆயிரத்து 63 எனவும் அத்துடன் மத்தள விமான நிலையத்தினூடாக 12,446 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் தொழில் புரிந்தவர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியம், மாலைதீவு, இந்தியா அவுஸ்திரேலியா, கட்டார், ஓமான், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்தே அதிகமானோர் நாடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.