– நமது நிருபர்

காத்தான்குடி: ஜனாதிபதி வேட்பாளராக ஒட்டகச்சின்னத்தில் போட்டியிடும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (11) சற்று முன்னர் இடம்பெற்றிருந்தது. மக்கள் எதிர்பார்த்து வந்ததைவிட, வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் உரை தனித்திருந்தது ஓர் விசேட அம்சமாகும்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோருடன் 1988 இல் பேசப்பட்ட அரசியல் வரலாற்றுடன் ஆரம்பித்த அவரது பேச்சில் ஓர் ஆளுமை இருப்பதைக் காணக்கிடைத்தது.

தனது கடந்த கால உயிர் அச்சுறுத்தல்களிலிருந்து அல்லாஹ் என்னைக் காத்துவருவது போல் என்னை தொடர்ந்தும் காப்பான் எனவும், எந்த அரசியல்வாதிக்கும் கொடுக்காத அருளையும் திறைமையையும் தனக்கு அல்லாஹ் அருளி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசியல்வாதிகளுள் அரசியலில் கலாநிதிப்பட்டம் பெற்ற ஒரே அரசியல்வாதி தான் எ னவும் தெரிவித்தார்.

நான் கோட்டாவின் ஒரு ஏஜண்ட், தனது பல்கலைக்கழகத்தை மீண்டும் பெறுவதற்காகவே கோட்டாவுடன் சேர்ந்திருக்கிறேன் என மக்கள் பல வகையிலும் என்னை விமர்சிக்கின்றனர். நான் முஸ்லிம் சமூகத்தின் ஏஜண்டே தவிர வேறு யாருடைய ஏஜண்டும் கிடையாது, ஜே.வி.பி. வேட்பாளர் இந்தத் தேர்தலில் இருந்து விலகினால் நாளை நானும் இந்தத் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.


இது ஒரு உயிர் அச்சுறுத்தல்மிக்க புனிதப் போர் எனவும், தனக்கு உயிர் ஆபத்துக்கள் இருப்பதாகவும், தான் எந்நேரத்திலும் கொல்லப்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.

தனக்கு இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்களின் ஆதரவுகள் கிடைத்துவருவதாகவும், அதன் மூலம் எனக்குக் கிடைக்கும் வாக்குகளைவைத்து, ஜனாதிபதியைத் தீர்மானித்து அவரிடம் முஸ்லிம் சமூகத்துக்கான பாதுகாப்பினையும், உரிமைகளையும் மீண்டும் பலப்படுத்தி அவற்றை உறுதிசெய்துகொள்ளும் ஓப்பந்தத்திற்கான ஓர் முன்னெடுப்பு எனவும் தெரிவித்தார்.

 

தங்களது முதலாவது தெரிவை குர்ஆனில் கூறப்பட்ட மிருகமான ஒட்டகச் சின்னத்துக்கு 1 இலக்கத்தையும், இரண்டாம் விருப்பு வாக்கை தான் நவம்பர் ஆரம்பத்தில் சொல்லும் ஒரு வேட்பாளருக்கு அளிக்கும்படியும் தெரிவித்தார்.

மிக நீண்ட நேரம் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் உரையைக் கேட்க அதிகளவிலான மக்கள் வருகை தந்திருந்தனர்.

வழமைக்கு மாறாக ஆதரவாளர்களின் கூச்சல், கரகோசம் இன்றி அமைதியாக இருந்தது பிரச்சாரம்.