பக்தாத்: ஈராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் மேலும் வலிமையானதால், இந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்தது.
மிக அதிகமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள், மற்றும் ஊழல். இதுதான் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும். கடந்த செவ்வாய்கிழமை அன்று இது தொடர்பாக திடீர் போராட்டம் வெடித்தது.
முன்னதாக இதுகுறித்து பேசிய அந்நாட்டு பிரதமர், அடெல் அப்டெல் மஹ்தி, போராட்டங்களின் நியாயமான கோரிக்கைகள் கேட்கப்படும் என்றும் அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கோரினார். அமைதி காக்கக் கோரி பிரதமர் அழைப்பு விடுத்த போதிலும், நூற்றுக்கணக்கான இராக் மக்கள் வீதிகளில் வந்து போராடினார்கள். இராக் தலைநகர் பாக்தாதில், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு, இணைய சேவைளும் முடக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் கூடுவதைத் தடுக்க முடியவில்லை.
பக்தாதில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தைப் போராட்டக்காரர்கள் அடைய முயற்சிக்க பாதுகாப்பு படையினர் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
களத்தில் இருக்கும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறுகையில், பல பேருக்கு தலையில் மற்றும் வயிற்றில் தோட்டாக்கள் பாய்ந்ததாகக் கூறுகிறார்.