சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ள சவுதி அரேபியா

saudi 1றியாத்: கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் போக்கை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதல் முறையாக சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ளது சவுதி அரேபியா. அதுமட்டுமின்றி, இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 49 நாடுகளை சேர்ந்தவர்கள் எவ்வித விசாவும் இன்றி நேரடியாக சௌதி அரேபியாவுக்கு வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு இருக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் சுற்றுலாவுக்கு வரும் பெண்களுக்கு முற்றிலும் பொருந்தாது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

இந்நடவடிக்கை சவுதி அரேபியாவின் “வரலாற்று சிறப்புமிக்க” தருணம் என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-காடீப் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்புவரை, பெரும்பாலும் யாத்ரீகர்கள், தொழில் மற்றும் புலம்பெயருபவர்களுக்கு மட்டுமே சவுதி அரேபியா விசா வழங்கி வந்தது. சுற்றுலாத்துறையின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அந்நாட்டு அரசு முயன்று வருவதாக தெரிகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது மூன்று சதவீதமாக இருக்கும் சுற்றுலாத்துறையை, 2030ஆம் ஆண்டிற்குள் 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“சவுதி அரேபியாவிலுள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஐந்து இடங்கள், நாட்டின் தனித்துவமிக்க கலாசாரம் மற்றும் மெய்சிலிர்க்கவைக்கும் இயற்கையின் அழகை கண்டு சுற்றுலாப்பயணிகள் வியப்பில் ஆழ்வார்கள்” என்று காடீப் நம்பிக்கை தெரிவிக்கிறார். சவுதியை சேர்ந்த பெண்கள் பொதுவெளியில் இருக்கும்போது கட்டாயமாக அணிய வேண்டிய உடலை மறைக்கும் மேலங்கியான ‘அபாயா’விலிருந்து பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் கண்ணியமான ஆடையை அணிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பெண்கள் தன்னந்தனியாக சவுதிக்கு சுற்றுலா வருவதற்கும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

“எங்களுக்கென்று கலாசாரம் உள்ளது. அதை எங்களது நண்பர்களும், விருந்தினர்களும் புரிந்துகொண்டு மதிப்புடன் நடந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்” என்று காடீப் மேலும் கூறியுள்ளார்.

saudi 1

முஸ்லிம் அல்லாதோர் சவுதி அரேபியாவிலுள்ள புனித தலங்களான மக்கா மற்றும் மதீனாவை பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டு வந்த தடை தொடருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, மதுபானம் மீதான தடையும் நீடிக்கும். சவுதி அரேபியாவிலுள்ள எண்ணெய் கிடங்குகள் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலால், சவுதிக்கு வர சுற்றுலாப்பயணிகள் தயங்குவார்கள் என்ற கருத்தை தான் நம்பவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“உலகிலுள்ள மிகவும் பாதுகாப்பான நகரங்களில் எங்களது நகரங்களும் அடக்கம். எனவே, எதன் காரணமாகவும் எங்களது திட்டத்தில் தாக்கம் இருக்காது என்று நம்புகிறோம். தத்தமது நாடுகளிருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியாவில் வாழும் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களது நாடு மிகவும் பாதுகாப்பானது” என்று காடீப் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்யை தவிர்த்து, மற்ற மூலங்களின் வாயிலாகவும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் பொருளாதார சீர்த்திருக்க நடவடிக்கையில் மையமான சுற்றுலாத்துறையின் கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம், சவுதி அரேபியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் வருகையை 2030ஆம் ஆண்டிற்குள் பத்து கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதன் மூலம் சௌதியின் சுற்றுலாத்துறையை மையமாக கொண்டு புதிதாக பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s