போரா சமூகத்தினரின் சர்வதேச மாநாட்டிற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி அவற்றை முறைமைப்படுத்த வேண்டியவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களே தவிர, மாநாட்டிற்காக இங்கு வந்திருக்கும் போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து, அவற்றுக்கமைவாகச் செயற்பட வேண்டும். உண்மையில் அவ்வாறு செயற்படுவதற்கு அவர்கள் தயாராக இருக்கும் நிலையிலும் கூட, அரசாங்கம் அதற்கு அவசியமான உத்தரவுகளையும் வேண்டுகோள்களையும் பிறப்பிக்கவில்லை என்று அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கொழும்பில் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை போரா முஸ்லிம் சமூகத்தினரின் சர்வதேச மாநாடு இடம்பெறவிருப்பதை நாம் எதிர்க்கவில்லை. நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களும் அல்ல. இம்மாநாட்டிற்காகப் பெருமளவான போரா முஸ்லிம்கள் இலங்கை வந்திருக்கும் நிலையில், அது நாட்டிள் பொருளாதாரத்திற்கு சாதகமானது என்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
எனினும் எமது சுயாதீனத்துவம் மற்றும் சுயமரியாதை என்பவற்றுக்கு உட்பட்டே அவை இடம்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.