பதுளை: இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக அந்த பகுதியின் மலைத்தொடரும், அங்கு நிலவும் குளிர்ச்சியான வானிலையும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
எனினும், எல்ல பகுதியிலுள்ள வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எல்ல வனப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறித்த பகுதியிலுள்ள சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப் பரப்பு தீக்கிரையாகியுள்ளன. இந்த வனப் பகுதியிலுள்ள இயற்கை மூலிகைகள், பெறுமதிமிக்க மரங்கள், செடிகள், இலங்கைக்கே உரித்தான உயிரினங்கள் என பல அழிந்திருக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
குறிப்பாக மனித செயற்பாடுகள் காரணமாகவே இந்த தீ பரவியிருக்கக்கூடும் என சூழலியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.