- உசேன்YKK
3.
‘முகமட் சைனி’க்கும் ‘அப்துல்லாஹ் ஹமவோஸ்த்’ முகநூல் கணக்கிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் பின்னர் ஊருக்குள் தொடர ஆரம்பித்தன.
2013 இல் ‘கப்ர்களை ஷியாரத் செய்வது கூடும்’ எனும் கருத்தில் அப்துர் ரஊப் மௌலவியின் மார்க்க உரையிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ‘கிளிப்’ இல் இருந்து காத்தான்குடியில் மௌலவி அப்துர் ரஊபிற்கு எதிரான கொள்கைப் பிரசாரங்களை தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதான பேச்சாளராக இருந்த காசிம் முகமட் ஸஹ்ரான் தலைமையில் இவ்வமைப்பு முன்னெடுக்கிறது.
‘மௌலவி அப்துர் ரஊப் நிரூபிப்பாரா’ எனும் தொடர் 38 இறுவட்டுக்கள் வரை சென்றது.
“அப்துர் ரஊப் மௌலவி மார்க்கத்தின் பெயரால் அவிழ்த்திவிடும் பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் முன்னிலையில் வெளிக்கொண்டுவந்து அவற்றுக்கான மார்க்க விளக்கங்களை அளிக்கும் இந்நிகழ்ச்சி” மூலம் ஸஹ்ரான் புகழ் இலங்கையில் மாத்திரமன்றி தென் இந்தியா வரைக்கும் சென்றது.
1979 காத்தான்குடியில் ஏற்பட்ட மார்க்க முரண்பாட்டிற்குப்பின்னர் அப்துர் ரஊப் மௌலவி, காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா உறுப்பினர்களை தனது கொள்கையை நிரூபிப்பதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்தார். மௌலவி அப்துர் ரஊபின் விதாத அழைப்பிற்கு ஜம்மிய்யா உலமாக்கள் செவிசாய்க்கவில்லை.
இதன்பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத் மௌலவி அப்துர் ரஊபிற்கு பகிரங்க விவாத அழைப்பு விடுத்திருந்தது. “தங்களது பதுரியா பள்ளிவாயலுக்குள் வந்தே தங்களோடு விவாதிக்கத்தயார்” எனவும் அழைப்பு விடுத்திருந்தனர்.
1979-1990 இற்கு இடைப்பட்ட காலத்தில் சாதாரன மௌலவியாக இருந்த மௌலவி அப்துர் ரஊப் அவர்கள், தனது அன்றாடத் தேவைகளை சில இடங்களுக்குத் தானே தனியாகச் சென்று நிவர்த்தி செய்துவந்தார். காத்தான்குடி 5, ஆதம்போடி ஹாஜியார் ஒழுங்கையிலிருந்து சுலைமான் முஅத்தினார் ஒழுங்கை ஊடாக தனது தந்தையின் பத்ரிய்யாப் பள்ளிக்கு மதியம் 3 மணியளவில் தனியாகச் செல்லும் காட்சி ஓர் அழகு.
நறுமணமிக்க இந்திய அத்தர் வாசனையுடன் ‘கோல்ட் லீப்ஃ’ சிகரட்டையும் வாயில் வைத்து தன்னந்தனியாக அவர் செல்லும்போது அந்த இருவாசனைகளும் ஓர் அரைமணி நேரமாவது இவ்விரு ஒழுங்கைகளையும் ஆக்கிரமித்திருக்கும்.
தனது மற்றும் பள்ளி வருமானத்தைக் கருத்திற்கொண்டு தனது ஆதரவாளர்களுக்கு தன்கொள்கை விளக்க நூற்களையும், பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் வாராந்தம், மாதாந்தம் வெளியிட்டு வருமானங்களை ஈட்டினார்.
காத்தான்குடியில் அந்நேரம் வருடத்திற்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் மௌலீத்களைத் தவிர வேறு எந்த மௌலீத்களோ, கந்தூரிகளோ பத்ரிய்யாவில் இடம்பெற்றிருக்கவில்லை. வெள்ளி இரவு மாத்திரம் குத்பிய்யா நிகழ்வு இடம்பெற்று வந்தது.
“மௌலவி” என்றே அவர்களது ஆதரவாளர்கள் இந்த காலகட்டத்தில் அழைத்து வந்தனர்.

1987-1988 காலப்பகுதியில் ஹாஜா கந்தூரி பத்ரிய்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கந்தூரி அவர்களிடத்தில் புகழ்பெற ஆரம்பித்ததுடன் வருமானங்களையும் அதிகளவில் பெற வழிசமைத்தது.
பின்னர் 1994 இல் அரசியலில் சுயேட்சைக்கட்சியில் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கிய மௌலவி அவர்கள், இரண்டாமிடத்தைப் பெற்றார்.
மௌலவி என்று அழைக்கப்பட்டு வந்த மௌலவி அப்துர் ரஊப் பின்னர் “செய்குனா” என அழைக்கப்பட்டார்.
2000 காலப்பகுதியில் இருந்து காத்தான்குடியில் ஏற்பட்ட தௌஹீத் வளர்ச்சி செய்குனா அவர்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்தது.
இந்நிலையில் இந்த தௌஹீதை முறியடிப்பதற்காக தனது “எல்லாம் அவனே” கொள்கையுடன் “சுன்னத் வல் ஜமாஅத்” என்ற பெயரையும் தங்களோடு சேர்த்து பிரசாரம் செய்து வந்தார்.
இதன் காரணமாக தௌஹீதுக்கு எதிரான காத்தான்குடி உலமாக்களில் சிலரும் உலமாக்கள் சார்ந்த மக்களில் சிலரும் செய்குனா அவர்களின் கந்தூரி, மௌலீது நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
2004 காத்தான்குடியில் மார்க்கத்தின் பெயரால் இடம்பெற்ற வன்முறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து அரசியல் அதிகாரங்களுடன் தனது கொள்கைப் பிரசாரங்களை முன்னெடுத்துவந்தார்.
2006 உள்ளுராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்-எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து வெற்றிபெற்று ஊர்வலத்திலும் கலந்துகொண்டார்.
“மௌலவி”, “பெரிய மௌலவி”, “செய்குனா” என்று அழைக்கப்பட்டு வந்த மௌலவி அப்துர் ரஊப், “பெரியவக”, “வாப்பா” என அழைக்கப்பட்டு, இன்று “அவ்லியா”, “நாயகம்”, “கலாநிதி” என அழைக்கப்படுகிறார்.
பத்ரிய்யவைக் கட்டியெடுப்பதைப் பார்க்கிலும் தனது கொள்ளையை வளர்த்தெடுப்பதில் வறுமைக்கோட்டிகுக் கீழ் இருந்த மௌலவி அப்துர் ரஊப் அவர்கள் பின்னர் அன்று ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வங்கி “ஸ்பொன்சர்” காட்டும் அளவிற்கு பணவைப்பு அவரிடம் இருந்தது.
அவருக்கென்று தனியான மாளிகை, பாதுகாப்பு, உணவு, சலுகைகள், சந்திப்புக்கள், ஆடம்பர வாகனங்கள், அரசியல் செல்வாக்குகள் என்று தங்கள் ஆதரவாளர்களுக்கிடையே ஓர் தனி மதிப்பும், மரியாதையும், புகழும் பெற்று கௌரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்த மௌலவி அப்துர் ரஊப் அவர்களை, அதே ஊரில் பகிரங்கமாக எதிர்க்கும் திறன்கொண்ட ஓர் குழு உருவாகி வருவது பத்ரிய்யா வட்டாரத்துக்குள் கவலையையும், சவாலையும் ஏற்படுத்தியது.உசேன்YKK
இன்ஷா அல்லாஹ் தொடரும்….
குறிப்பு: இத்தொடரில் முன்னுக்குப்பின் சில சம்பவங்கள் எழுதப்படும், ஒர் சம்பவம் தேவைப்படின் மீண்டும் எழுதப்படும். காத்தான்குடியின் புகைப்படம் தவிர தனிப்பட்டவரது புகைப்படங்களோ, அமைப்புக்களின் புகைப்படங்களோ வெளியிடப்படாது.