- முகமட் ஜலீஸ், இங்கிலாந்து
லண்டன்: ஐ.சி.சி. உலகக்கிண்ணம் 2019 இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கிரிக்கட்டின் இல்லம் என அழைக்கப்படும் உலகப்புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஐ.சி.சி. உலகக்கிண்ணப் போட்டி முதன்முதலில் 1975 இல் இடம்பெற்றபோது அத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தெரிவாகி, மேற்கிந்தியத்தீவுகளுடன் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியதிலிருந்து 1979 இறுதிப்போட்டி, 1992 இறுதிப்போட்டி ஆகிய 3 ஐ.சி.சி. உலகக்கிண்ணப்போட்டிகளிலும் இரண்டாமிடத்தைப் பெற்றது.
1992 உலகக்கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து இருந்த பலமான அணிபோல் 27 வருடங்களுக்குப் பின்னர் அதே ஓர் பலமிக்க அணியாக இங்கிலாந்து காணப்படுவதை கிரிக்கட் பிரமுகர்கள் உலகக்கிண்ணத்திற்கு முன்னரே கூறியிருந்தனர்.
இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் இங்கிலாந்தும் வர வாய்ப்பிருப்பதாக பலர் எதிர்பார்த்திருந்தனர்.
இறுதிப்போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் ஏலவே விற்றுத்தீர்ந்துவிட்டன. சாதாரணமாக இலங்கை பெறுமதியில் 50 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 15 இலட்சம் ரூபாய்வரை விற்கப்பட்டிருந்தன.
![lords[1]](https://yourkattankudy.files.wordpress.com/2014/05/lords1.jpg?w=474)
இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அரைவாசிக்குமேல் நுழைவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்திருக்கின்றனர். எனினும் அவை அதிகவிலைக்கு மீள் விற்பனை செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.
உலகவரலாற்றில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் முதன்முதலில் ஐ.சி.சி. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இங்கிலாந்தின் ஸ்திரமான துடுப்பாட்ட வரிசை, விவேகமான பந்துவீச்சாளர்கள் மற்றும் திறமையான களத்தடுப்பு இவைகளுடன் சொந்த மைதான ஆதரவு வெற்றி வாய்ப்புக்கு சாதகமாக இருப்பதாக கிரிக்கட் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் அபாரமான பந்துவீச்சு விதமும், களத்தடுப்பும் அவ் அணிக்கு சாதகமாக அமைந்தாலும், துடுப்பாட்டம் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகவே நியூசிலாந்துக்கு அமைகிறது.
லோர்ட்ஸ் மைதானம் 300 ஓட்டங்கள் பெறக்கூடிய ஆடுகளமாகவே அமைகிறது. முதல் 10 ஓவர்களில் விக்கட்டுக்களை விடாமல் துடுப்பெடுத்தாடும் அணி சாதராணமாக 300 ஓட்டங்களைத் தாண்டும்.
எனினும் இறுதிப்போட்டி பதட்டம் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு இருக்கவே செய்யும்.
இங்கிலாந்தில் உலகப்புகழ்பெற்ற விம்பிள்டன் போட்டிகளும் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. இப்போட்டிக்கும் உலக செல்வந்தர்களும், பிரமுகர்களும் வருகை தந்திருக்கின்றனர்.
இன்றைய உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தின் அரசபரம்பரை அங்கத்தவர்கள், விளையாட்டுப்பிரமுகர்கள் என பல வி.ஐ.பிகள் வருகை தரவிருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிமை 22 செல்சியஸ் வெப்பநிலை லண்டனில் காணப்படும். வெயிலுடன் மேகக்கூட்டகள் ஆங்காங்கே அமையும் எனவும் மழை எதிர்பார்க்கப்படவில்லை எனவும் உள்ளுர் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இறுதிப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் சூப்பர் ஓவர் மூலமாக வெற்றிதோல்வி தீர்மானிக்கப்படும்
நியூசிலாந்து அணி கடந்த உலகக்கிண்ண 2015 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் படுதோல்வியடைந்தது. நியூசிலாந்து அனைவருக்கும் ஓர் அனுதாப அணியாகவே அமைகிறது. வென்றாலும் நியூசிலாந்தை ஆதரிப்பவர்களே அதிகமாக இருப்பர். தோற்றாலும் அவ்வணிக்காக கவலைப்படும் இரசிகர்களும் அதிகமாகவே இருப்பர்.
கிரிக்கட் விளையாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து மக்களின் கனவு நனவாகுமா அல்லது தொடருமா என்பது ஞாயிற்றுகிழமை இறுதிப்போட்டியில் தெரியும்.