மன்செஸ்டர்: இந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி (9) மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் நாளை (10) ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு போட்டி துவங்கும். நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளை 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும்.
நாளையும் மன்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக உள்ளுர் வானிலை அறிக்கைகூறுகிறது.மழையால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை எனில் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைக்கு வேலையில்லை.
ஆனால் நாளை(புதன்கிழமை) மழை பெய்யும் பட்சத்தில் எந்தவொரு கட்டத்திலும் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை கணக்கீடு முக்கிய பங்கு வகிக்கும்.
நாளையும் மழை பெய்து நியூசிலாந்து ஆட்டத்தை துவக்க முடியவில்லை எனில் இந்தியா 20 ஓவர்கள் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 148 ரன்கள் எடுக்க வேண்டியதிருக்கும். நாளை (புதன்கிழமை) இந்திய அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய இயலாமல் போனால் ஆட்டம் கைவிடப்படும்.
அப்படி ஒரு சூழல் உருவானால் ரவுண்ட் ராபின் சுற்றில் நியூசிலாந்தை விட இந்தியா அதிக புள்ளிகள் எடுத்திருப்பதால் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும். இன்றைய போட்டியில் இரு அணியிலும் களமிறங்கிய வீரர்களே நாளையும் விளையாட வேண்டும். பேட்டிங் அல்லது பௌலிங்கில் மாற்று வீரர் பங்கெடுக்க முடியாது. இன்று ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை காண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தால் அதனை நாளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த நுழைவுச் சீட்டை நாளை விளையாட்டரங்கில் நுழைவதற்கு முன் பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டியதிருக்கும்.
ரசிகர்கள் நுழைவுச் சீட்டை விற்க முடியாது.
ஆனால் இன்றைய தினமே ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் தானம் செய்ய முடியும். நுழைவுச் சீட்டை தானம் செய்து விட்டால் அதைப் பயன்படுத்தி நாளை அவர் உள்ளே நுழைய முடியாது.