- முகமட் ஜலீஸ், இங்கிலாந்து
மன்செஸ்டர்: உலகக்கிண்ண கிரிக்கட் சுற்றின் முதலாவது அரை இறுதிப்போட்டி இன்று (9) செவ்வாய்க்கிழமை மன்செஸ்டர் நகரின் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. மன்செஸ்டர் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களுள் 6வது இடத்தில் காணப்படுகிறது. வெள்ளை இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட மன்செஸ்டர் நகரில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
குறைந்தது இரு ஆசிய அணிகளாவது அரை இறுதிக்குத் தெரிவாகலாம் எனும் நோக்கில் கிரிக்கட் விளையாடும் ஆசிய நாட்டவர்கள் பிரதானமாக வசிக்கும் மன்செஸ்டரிலும், பேமிங்ஹமிலும் இரு அரை இறுதிபோட்டிகளுக்கான இடத்தினையும் இங்கிலாந்து கிரிக்கட் தேர்வு செய்திருந்தது..
இங்கிலாந்தில் எந்த நகரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகிறதோ அந்த மைதானங்கள் இவ்விரு அணிகளுக்கும் சொந்த மைதானம் போன்றதாகவே காணப்படும்.
நாளை இந்திய அணிக்கே மைதானத்தின் பிரமாண்டமான ஆதரவு இருக்கப்போகிறது. எனினும் ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கட் இரசிகர்கள் நியூசிலாந்துக்கு ஆதரவு அளிக்கும் நிலையும் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் காணக்கூடியதாக இருக்கும்.
நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் இதுவரை 8 அரை இறுதிப்போட்டிகளில் விளையாடிய பெருமையைப் பெற்றிருக்கின்றன. (7 போட்டிகள் நிறைவு). அவுஸ்திரேலியா விளையாடிய 7 அரை இறுதிப்போட்டிகள் எதிலும் தோல்வியைத்தழுவியதில்லை என்பதும் விசேட அம்சம்.
நியுசிலாந்து விளையாடிய 7 அரை இறுதிப்போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்று முதன் முதலாக இறுதிப்போட்டிக்குச் சென்றது. கடந்த 2015 இல் மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியிடம் தனது வெற்றிக்கனவைப் பறி கொடுத்திருந்தது.
இந்தியா இதுவரை 5 அரை இறுதிப்போட்டிகளில் விளையாடி, இரு தடவை உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றி இருக்கின்றது.
துடுப்பு வரிசையில் அணித்தலைவர் வில்லியம்சனும் மார்டின் கப்ரிலையும் தவிர வேறு எந்த வீரர் சோபிக்கப் போகிறார் என நியூசிலாந்து மக்களும் அதன் இரசிகர்களும் ஏங்கிப்போய் இருக்கும் இத்தருணத்தில்….
மன்செஸ்டர் துடுப்பாட்டத்திற்குச் சாதகமான ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2லும் வென்றுள்ளது.மன்செஸ்டரில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றியும் பெற்றிருக்கின்றன.
நாளைய நாணயச் சுழற்சி இந்தியாவைவிட நியூசிலாந்துக்குப் பிரதானமாக அமையப்போகிறது.