-2-
உசேன்YKK
1990 ஆரம்ப காலங்களில் அப்துர் ரஊப் மௌலவியின் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற துண்டுப்பிரசுரங்கள் அவ்வப்போது என்று கூறுவதைவிட தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தன என்றே கூற வேண்டும்.
அந்த துண்டுப்பிரசுரங்களில்கூட தங்களது ஆதரவாளர்களை தௌஹீத்வாதிகளே என்றே அழைத்து எழுதி வந்தார். காத்தான்குடிக்குள் 2000 ஆண்டு ஆரம்ப காலம் அதாவது தௌஹீத் இயக்கங்களாக விரிவுபடும்வரை தங்கள் ஆதரவாளர்களை தௌஹீத்வாதிகள் என்றே அவரும் அழைத்துவந்தார்.
இவ்வாறு 2000ம் ஆண்டு ஆரம்ப காலங்களில் காத்தான்குடியில் தௌஹீத் – இயக்கங்களாக வளர்ச்சியடைகின்றன. பருவவயதையடையாதவர்கள் கூட தௌஹீத் இயங்கங்களின் வளர்ச்சியால் விரலை அசைப்பதும், தொப்பிகள் இல்லாமல் தொழுவதும், கூட்டு துஆக்களைப் புறக்கணிப்பதும்….. கூட்டங்களும், மேடைப் பேச்சுக்களும், தங்களுக்குப் பிடிக்காதவர்களை காபிர் என்று ஃபத்வா கொடுப்பது … என்று ஓர் கோணத்தில் தௌஹீத் சென்றுகொண்டிருந்தது.
சிறுபராயத்தினரின் இத்தகைய திடீர் தௌஹீத் வளர்ச்சி மூத்த உலமாக்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
அப்துர் ரஊப் மௌலவியின் கப்ர் வணக்கம், ஹாஜா கந்தூரி, மற்றும் அடிப்படைக்கொள்கைகளை எதிர்ப்பதற்காக ஆரம்பித்த இத்தகைய இளம் பிராயத்தினரின் தௌஹீத் கூட்டுக்கள், பின்னர் பதவி, திருமணம், அரபிக்காசு மோகம், குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கங்களில் தங்களுக்குள்ள பிழையான அர்த்தம் புரிதல் போன்றவற்றால் ஒரு கூட்டணியாக இருந்த இளம்பராய தௌஹீத்வாதிகள் பின்னர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்றனர்.
தங்களுக்குள் இருந்த பிளவுகள் பின்னர் பொலிஸ் நிலையம் வரை தொடர்ந்தன.
தங்களுக்குள் சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும் கொள்கையளவில் தாங்கள் தௌஹீத்வாதிகளே என்றும் தாங்கள் அனைவரும் அப்துர் ரஊப் மௌலவியின் கொள்கையை எதிர்ப்பவர்களே என்றும் கூறிவந்தனர்.
பின்னர் ரமழானுக்கும் ஷவ்வாலுக்கும், துல்ஹஜ்ஜூக்கும் சர்வதேசப் பிறைக்குள் இணைந்தன இன்னும் சில தௌஹீத் இயக்கங்கள்.

உள்ளுர் பிறையா அல்லது சர்வதேச பிறையா சரி என்பதற்காகவே மாநாடுகளும் விவாத அழைப்புக்களும் காத்தான்குடியில் மேலோங்கி இருந்தன.
காலணி, காதணி, கைவளையல் மொத்தத்தில் தங்க ஆபரணம் பெண்களுக்கு ஹராம் என்றும், இல்லை அவை ஹலால் என்றும் தங்களுக்குள் அடித்துக்கொள்ளாத குறையாக செயற்பட்டனர்.
சீதனம் வாங்கும் தௌஹீத்வாதிகளும் இருந்தனர். சீதனத் திருமணத்தை எதிர்க்கும் தௌஹீத்வாதிகள் சீதன வலிமா விருந்தில் சிறப்பித்தும் இருந்தனர்.
முகநூல் தௌஹீத்வாதிகள் தங்களுக்குள் இயக்கவெறி தலைக்கேறி எதை எழுதுவது, எதை பதிவேற்றுவது என்றுகூட அறியாமல் செயற்பட்டனர்.
இப்படி தௌஹீத்வாதிகளுக்குள்ளேயே பனிப்போர் நாளாந்தம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
பிரதான தற்கொலை குண்டுதாரி முகமட் ஸஹ்ரான் காசிமின் சகோதரர் முகமட் ஸைனி எனும் முகநூல் கணக்கிற்கும் அப்துர் ரஊப் மௌலவி ஆதரவாளர் ஒருவரின் “அப்துல்லாஹ் ஹமவேஸ்த்” எனும் போலி முகநூல் கணக்கிற்கும் அடிக்கடி முகநூல் சண்டை இடம்பெற்றுவந்தது.
குறிப்பாக நான் அறிந்தவகையில் 2013 இல் அடிக்கடி இருதரப்புக்குமிடையில் முகநூல் இடுகைகளின் மூலமாக சண்டை தொடர்ந்தன.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்……
- உசேன்YKK
- குறிப்பு: இத்தொடரில் முன்னுக்குப்பின் சில சம்பவங்கள் எழுதப்படும், ஒர் சம்பவம் தேவைப்படின் மீண்டும் எழுதப்படும். காத்தான்குடியின் புகைப்படம் தவிர தனிப்பட்டவரது புகைப்படங்களோ, அமைப்புக்களின் புகைப்படங்களோ வெளியிடப்படாது.
நன்றி