லண்டன்: நடப்பு உலக கோப்பை தொடர் அரையிறுதியில் 11 ஆண்டுகளுக்கு பின் கோலி தலைமையில் இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோதுகிறது. 2019 உலகக்கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிந்து விட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன.
அதில் முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாயன்று மோதுகின்றன. வியாழக்கிழமை 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் சந்திக்கின்றன. 2 போட்டிகளிலும் வெல்லும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (14) இறுதிபோட்டியில் சந்திக்கின்றன.
2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதியில் இதே இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணியின் விராட் கோலி. மறுபக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார்.
அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இந்தியா ஆடிய போது மழை வந்தது. எனவே, 43 ஓவராக குறைக்கப்பட்ட 191 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அதில் கோலி 43 ரன் எடுக்க, அவரது உதவியால் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
2008-ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் கோலியும் ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.