கொழும்பு: கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புலனாய்வு தகவல்களில் தெளிவாக விடயங்கள் கூறப்பட்டிருந்த போதிலும், போலீஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்ப செயலாளர் ஆகியோர் பெரிய அழிவொன்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் தேதி மற்றும் நேரம் அறிந்திருந்தது, தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவது குறித்து அறிந்திருந்தது, இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்ட நபர்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிந்திருந்தது, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இலக்காக வைக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களை அறிந்திருந்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி, பிரதமர், முப்படை பிரதானிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு அறிவிக்காமல் இ்ருந்தது மற்றும் ஏப்ரல் 18,19 மற்றும் 20ஆம் தேதிகளில் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்கள் குறித்து போலீஸ் மாஅதிபர் கவனம் செலுத்தாமல் இருந்தது என்ற விடயங்களை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு பிரதான அரசியல் பின்னணி ஒன்று இருந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. இவ்விருவரின் கைதுகளின் பின்னர் இன்னும் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.