- உசேன்YKK
காத்தான்குடி: அரபு மத்ரஸாக்கள் இலங்கையில் உருவாகுவதற்கு முன்னர் ஆலிம்களாக அழைக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள், மத்ரஸாக்களின் வருகைக்குப்பின்னர் மௌலவி எனவும், ஹஸ்ரத் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். ஆலிம்களின் நேரான மற்றும் சில தவறான வழிகாட்டல்களையடுத்து உலமாக்கள் என்றும் மௌலவிமார்கள் என்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் காத்தான்குடிக்குள் உதயமாகினர்.
இவ்வாறு மக்கள் சரியோ தவறோ என்றறியாத நிலையில் 1980களின் ஆரம்பத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து ஆண்களும் பெண்களும் வேலைவாய்ப்புக்களுக்காக சென்று வந்தனர்.
இத்தகைய காலப்பகுதியில் இலங்கையில் கடைப்பிடித்துவரும் இஸ்லாத்திற்கும் அரபு நாடுகளில் கடைப்பிடித்துவரும் இஸ்லாத்திற்கும் இடையில் சில அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்றுவந்தவர்களுள் பலர் அறிந்திருந்தனர்.
எனினும் அன்றைய காலகட்டத்தில் வெளிப்டையைத் தவிர்த்து தனிப்பட்ட ரீதியில் தங்களுக்குள் சிலர் கடைப்பிடித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 1990களில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் உச்ச கட்டமும், முஸ்லிம்கள் மீது தமிழீழப் புலிப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்புக்களும் நன்றாக வாழ்ந்தவர்களையும், படித்துப்பட்டம் பெறவேண்டிய மாணவர் சமுதாயத்தையும் மத்திய கிழக்கிற்கு தொழில் ரீதியாக வெளியேற்றியது.
1990களின் பின்னர் தௌஹீத் காத்தான்குடியில் வேரூன்றுகிறது.
காத்தான்குடியின் ஆரம்பத் தௌஹீத், காத்தான்குடியில் சுமார் ஓர் நூற்றாண்டாக தென்னிந்திய ஆலிம்களால் அறிமுகப்படுத்தப்பட்டுவந்த கத்தம், கப்று வணக்கம், ஆலிம் வழிபாடுகள், ராத்திப் இவைகளில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது.
குறிப்பாக சவுதி அரேபியாவுக்குச் சென்று வந்தவர்கள், சவுதியில் தொழில் புரிவோரின் உறவினர்கள் அவர்களது குடும்பத்தினர்களுள் தௌஹீத் தாக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது.
இதற்கிடையில் தௌஹீதைச் சார்ந்த இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், ‘தாருள் அர்க்கம்’ என்பன உதயம் பெற்றன.
இவ்வாறு தௌஹீத் காத்தான்குடிக்குள் தாக்கம் செலுத்திய 1990களின் பிற்பட்ட காலங்களில் தப்லீஹ் ஜமாஅத் பாரிய வளர்ச்சியை அடைந்திருந்தது. தப்லீஹ், தௌஹீத், தரீக்கா, அப்துர் ரஊப் மௌலவி என பல பிரிவுகள் கொள்கை அளவில் வேறுபட்டுக்காணப்பட்டன.
1979 இல் காத்தான்குடி உலமாக்களுக்கும் அப்துர் ரஊப் மௌலவிக்கும் இடையில் ஏற்பட்ட மார்க்கப்பிரச்சினையைத் தொடர்ந்து சுமார் 2000ம் ஆண்டு வரை உலமாக்களுக்கும் அப்துர் ரஊப் மௌலவி தரப்புக்கும் இடையிலேயே மார்க்க கருத்து மோதல்கள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் காத்தான்குடி மூத்த உலமாக்களின் மார்க்கவிடயங்களில் அதிருப்தியடைந்த, சவுதியில் உயர் இஸ்லாமியக் கல்வியைக்கற்ற மௌலவிமார்களுள் சிலரும், மத்திய கிழக்கிற்குச் சென்றுவந்தவர்களுள் சிலரும், உள்ளுர்வாசிகளில் சிலரும் ஒன்றிணைந்து தௌஹீத் அமைப்பொன்றை ஆரம்பிக்கின்றனர்.
காத்தான்குடி 5, மார்க்கட் வீதியில் ஓர் வீட்டில் முதன் முதலாக ஜூம்ஆ இடம்பெறுகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….
குறிப்பு: இத்தொடரில் முன்னுக்குப்பின் சில சம்பவங்கள் எழுதப்படும், ஒர் சம்பவம் தேவைப்படின் மீண்டும் எழுதப்படும். காத்தான்குடியின் புகைப்படம் தவிர தனிப்பட்டவரது புகைப்படங்களோ, அமைப்புக்களின் புகைப்படங்களோ வெளியிடப்படாது.
நன்றி
யுவர்காத்தான்குடி