கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சிறுக் குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய நிலையிலேயே, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. மேலும், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைத் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினராலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை பார்வையிடுவதற்கு தொடர்ச்சியாக அவர்களது உறவினர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள முற்றத்தில் காத்திருக்கும் நிலைமையை நாளுக்கு நாள் காணக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.