கொழும்பு: 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இதனைக் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அளவிற்கு மொஹமட் சஹ்ரானிற்கு அதிகாரங்கள் எங்கிருந்து கிடைத்தது என இதன்போது குறிக்கிட்டு தெரிவுக்குழு உறுப்பினர்கள், அசாத் சாலியிடம் கேள்வி எழுப்பினார்கள்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹ்ரான், மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்ததாக அவர், தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே, தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மொஹமட் சஹ்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் காணப்படும் விடயங்கள் என்னவென இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தமது தேர்தல் பிரசாரங்களின் போது, பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்பட கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் தங்களுடன் செய்துகொண்ட தேர்தல் ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லாஹ் மீறிவிட்டார் எனவும், அவருக்கு தாங்கள் ஆதரவு வழங்குவதில்லை எனவும் முகமட் சஹ்ரான் கடந்த 2015 தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக காணொளி மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.YKK