காத்தான்குடி: புனித ரமழான் மாதம் வருவதற்கு முன் ஹாஜா கந்தூரியிலிருந்து கொந்தளிக்கும் காத்தான்குடி, பெருநாள் முடியும்வரை சிறு சிறு சலசலப்புக்களுடன் இனிதே நிறைவடைவதுதான் கடந்த சுமார் 20 வருடங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் சாராம்சமாக இருக்கும்.
பிறை உள்ளுரா வெளிநாடா..? தறாவீஹ் 8 ஆ? 20ஆ? திடல் ஒன்றா…? நான்கா…? என்பதை விவாதிப்பதற்காக அறிஞர்கள் காத்தான்குடியை நோக்கிவந்த வரலாறுகள் இன்று துடைத்தெறியப்பட்டிருக்கின்றன.
“அஜஸ்ட்மெண்ட்” தௌஹீத் காரர்களும், ஜம்மிய்யத்துல் உலமாவை ஆதரிக்கும் தௌஹீத்வாதிகளும், உள்ளுர் பிறைவாதிகளும், தப்லிஹீன்களும், பிளவு பட்ட அரசியல்வாதிகளும் தோளோடு தோள் நின்று தொழுதுவந்த நபி வழியான பெருநாள் திடல் சுருட்டிவைக்கப்பட்டிருக்கிறது.
நோன்புப் பெருநாள் திடல் “செல்பி”களை இம்முறை பேஸ்புக்கில் காண முடியவில்லை. தேர்தல் காலங்களில் ஒருவரை ஒருவர் வசைபாடும் அரசியல்வாதிகளின் பொய்யான கைகோர்ப்பும் “முஸாபாஹ்”வும் இம்முறை அலை மோதவில்லை.
தறாவீஹ் செல்லும் பெண்களை குறிவைத்து தண்ணீர் பைகளையும், மிளகாய்த்தூள் பைகளையும் வீசியெறியும் கலிசடைக் கும்பல்களையும் தெருக்களில் காணமுடியவில்லை.
தலைக்கவசமில்லாமலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமலும் ஓர் மோட்டார் சைக்கிளில் மூவர் அமர்ந்து மூன்று வரிசைகளாக “சொந்த ரோட்”டில் ஓட்டப்பந்தயம் செலுத்தி, தன்பாட்டில் செல்லும் அப்பாவிகள் மீது மோதி, அவர்களைக் காயப்படுத்தி அங்கவீனர்களாக்கும் அந்த மதிகெட்ட கூட்டத்தையும் காண முடியவில்லை. கடைசிப்பத்திலும் முகத்தை மூடிக்கொண்டு குடும்பத்தோடு பிரதான வீதியை ஆக்கிரமித்து பஸாரில் நேரத்தைக் கழிக்கும் பெண்கள் கூட்டத்தையும் காண முடியவில்லை.
தறாவீஹ் காவாவும் சமுசாவும் மக்களின் நாக்குகளை நனைக்கவில்லை.
கொடுப்பவர்களைவிட பெறுபவர்கள் அதிகமானதாகவே இருந்தனர்.
கொழும்பு மேல்வர்க்கப் பெண்களைப்போல முகமூடிய ஜில்பாவும் ஒரு கையில் “கட்டித்தங்க” வளையலும் போட்டு “நாங்களும் ஹஜ் செய்த ஹாஜிகள் வர்க்கம்” என உலாவித்திரிந்த நவீன ரக மங்கைகளையும் காண முடியவில்லை.
மொத்தத்தில் கடந்த 30 வருட காலத்தில் முதன்முறையாக பெரும் மாற்றங்களைக் கொண்டதாக இம்முறை நோன்பும் பெருநாளும் கடந்து சென்றிருக்கிறது. – உசேன்YKK