லண்டன்: 12வது உலகக்கிண்ணப்போட்டிகளை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடாத்துகிறது. கோலாகளமாக இடம்பெறும் இவ் உலகக்கிண்ணத்திற்கான முதலாவது போட்டி மே 30 வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. கடந்த 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு இங்கிலாந்திற்குக் கிடைத்திருந்தபோதும், இங்கிலாந்து, வேல்ஸ் இணைந்து அதனை 2019 இற்கு பிற்போட்டிருந்தன.
முதலாவது போட்டியில் உலகக்கிண்ணப்போட்டிகளை நடாத்தும் இங்கிலாந்து அணியுடன் தென்னாபிரிக்கா அணி மோதுகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டி உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது.
பங்கேற்கும் நாடுகள்:
தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியுசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஐ.சி.சி. தரவரிசையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற அணிகள் இவ் உலகக்கிண்ணத்தில் பங்கெடுக்கின்றன.
நகரங்களும் மைதானங்களும்:
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் கிரிக்கட் ஆட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும் மைதானங்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
10 அணிகள் பங்குபற்றும் “ரவுண்ட் ரொபின்” லீக் சுற்றில் 45 போட்டிகள் இடம்பெறும். ஓர் அணி மற்றைய 9 அணிகளுடன் விளையாட வேண்டும். அரை இறுதி இரு போட்கள் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தமாக 48 போட்டிகள் இடம்பெறுகின்றன. 45 போட்களில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குத் தெரிவாகும். (1V4), (2V3).
முதல் அரை இறுதிப்போட்டி ஜூலை 9ம் திகதி மன்செஸ்டர், இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 11ம் திகதி பேர்மிங்ஹம் மற்றும் இறுதிப்போட்டி ஜூலை 14ம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்திலும் இடம்பெறும்.
மத்தியஸ்தர்கள்:
16 பிரதான நடுவர்களும், 6 போட்டி நடுவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
காலநிலை:
ஐக்கிய இராச்சியத்தின் கோடைகாலம் தற்பொழுது ஆரம்பித்திருக்கிறது. கோடைகாலம் என்றாலும் சராசரி வெப்பநிலை 18-25 வெல்சியஸ் இற்கு இடைப்பட்டதாகவே பெரும்பாலும் நிகழும்.
மழை மற்றும் முகிழ் கூட்டங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் காற்றுடன் கலந்த குளிர் மைதானத்தில் நிலவும். இத்தகைய குளிர் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபடும் குறிப்பாக ஆசிய அணிகளுக்கு சில வேளைகளில் சிரமங்களைக் கொடுக்கும்.
ஆடுகளமும் கள நிலவரமும்:
துடுப்பாட்டத்திற்கு ஏதுவாகவே ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி சராசரியாக 300 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியும். திறமையும் விவேகமும் இருந்தால் 300 இலக்கை துறத்தி வெற்றிகொள்ள முடியும்.
பரிசுத்தொகை:
வெற்றிபெறும் அணிக்கு 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசளிக்கப்படும். இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 20 இலட்சம் டொலர்களும், அரை இறுதிப்போட்டிகளில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 8 இலட்சம் டொலர்களும், லீக் போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு 40 ஆயிரம் டொலர்களும், அரை இறுதிக்குத் தேர்வாகாமல் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா ஒரு இலட்சம் டொலர்களுமாக மொத்தம் ஒரு கோடி அமெரிக்க டொலர்களை ஐ.சி.சி. இவ் உலகக்கிண்ணத்திற்காகப் பகிர்ந்தளிக்கிறது.
Lords London
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி:
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி உலகக் கிண்ணத்தின் முக்கிய போட்டியாக அமையும். இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய கிரிக்கட் சபை (பிசிசிஐ) பாகிஸ்தானுடன் இந்தியா உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடும் போட்டியை இரத்துச்செய்யுமாரு ஐ.சி.சியுடன் கேட்டிருந்தது. எனினும் இந்தியாவின் இக்கோரிக்கையை ஐ.சி.சி மறுத்திருந்த நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மன்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் விளையாட இருக்கின்றன.
நுழைவுக்கட்டணம்:
அதிகமான போட்டிகளின் நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. சாதாரணமாக 40 பவுண்களிலிருந்து 3000 பவுண்கள் வரைக்கும் நுழைவுக்கட்டணங்கள் அமைகின்றன. இடம், போட்டி, அணி, நேரம், ஆசனம், வரிசை இவற்றுக்கு ஏற்ப விலை வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
களம்:
உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் இங்கிலாந்து 3 முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகி தோல்வியைத் தழுவி இருக்கிறது. வெப்ப வலயத்தின் பின்னணியைக் கொண்ட மேற்கிந்திய அணி, இங்கிலாந்தில் இரு உலகக் கிண்ண வெற்றிகளையும், ஓர் ஐ.சி.சி. சம்பியன்ஸ் வெற்றியையும், இந்நியா ஓர் உலகக் கிண்ண வெற்றியையும், ஓர் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண வெற்றியையும் இங்கிலாந்தில் பெற்றிருக்கிறது. அவுஸ்திரேலியா ஓர் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்தில் பெற்றிருக்கிறது.
London Oval
பாகிஸ்தான் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தையும், ரி-20 கிண்ணத்தையும் இங்கிலாந்தில் வெற்றிகொண்டிருக்கிறது. இலங்கை ரி-20 இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இரண்டாமிடத்தை இங்கிலாந்தில் பெற்றிருக்கிறது.
எனவே, குளிர், சூடு, காற்று இவைகளுக்கு ஏற்ப வீரர்களைத் தயார்படுத்தி அவர்களை வழிநடாத்துவது பயிற்சியாளர்களுக்கும் அணித் தலைவர்களுக்கும் உள்ள பாரிய பொறுப்பாக அமையும்.
ஒன்பது போட்டிகளில் 7 போட்டிகள் ஓர் அணிக்கு சவால்மிக்கதாகவே அமையும் என்பது ‘வோர்ம் அப்’ போட்டிகள் எமக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றன.
பாதுகாப்பு:
நியுசிலாந்து கிறைஸ்சேர்ச் துப்பாக்கிச்சூடு, இலங்கை ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல், அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு… இவ்வாறு உலகில் ஆங்காங்கே இடம்பெற்ற அசம்பாவிதங்களைக் கருத்திற்கொண்டு, வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் வகையில் பொலிஸார், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அவசரப்பிரிவினர், மைதான காப்பரன்கள், கண்காணிப்புக் கமராக்கள் மற்றும் புலனாய்வாளர்கள் என பாதுகாப்பு பல்கோணங்களில் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதுவரைக்கும் 3.2 மில்லியன் நுழைவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பெண்களும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் 16 வயதுக்குக்கீழ்பட்டோர் எனவும் ஐ.சி.சி. அறிவித்திருக்கிறது.