கொழும்பு: பழைய விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் எந்த நேரத்திலும் அதனை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது என சபை முதல்வரும் தேசிய மரபுரிமைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறையை பின்பற்றுவதில் சிக்கல் உருவாகியுள்ளதால் பழைய முறையில் நடத்துவது தான் சரியானது எனவும் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், மாகாண எல்லை நிர்ணய பணிகள் மறுசீரமைக்கப்படவேண்டும்.
அது தற்போதைக்கு நிறைவேறும் சாத்தியம் கிடையாதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் இது இலகுவான காரியமாகும். இம்மாத இறுதிக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் அடுத்த வருடத்திலேயே மாகாணசபை தேர்தலை நடத்தமுடியும்.
மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில்தான் நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட சில கட்சிகள் பிடிவாதமாக இருந்தமையால் தான் உரிய காலத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
குறுகிய காலத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் துரிதமாக முயற்சி எடுக்கமுடிந்தால எதிர்வரும் மே மாதத்தில் அல்லது ஜூன் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.