கிறைஸ்ட்சேர்ச்: நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள இரு பள்ளிவாயல்களில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதியின் தாக்குதல் தொடர்பாக, கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதாகும் பிரெண்டன் டாரண்ட் எனும் நபர் தனியாக திட்டம் தீட்டியதாக நியூசிலாந்து காவல்துறையினர் நம்புகின்றனர்.மேலும் அவருடன் கைதான மூவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பில்லை எனத் தோன்றுவதாக கிறைஸ்ட்சேர்ச் நகர காவல் ஆணையர் மைக் புஷ் கூறியுள்ளார். தம்மை வெள்ளை இனவாதியாகக் கூறிக்கொள்ளும் அந்த நபர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், “கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை தொடுப்பதற்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் முன்னதாக அதுகுறித்த அறிக்கை ஒன்றை, எனக்கு உள்பட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்தார்” என்று கூறினார்.
இருப்பினும், அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்விட தகவலோ குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற இரண்டே நிமிடங்களில் அதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“இதை ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றுதான் கூற முடியும். நீங்கள் அனைவரும் அந்த தாக்குதல் காணொளியை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு நியூசிலாந்தில் இந்த உலகத்திலும் இடமில்லை,” என நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.