கொழும்பு: இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கொழும்பு, கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேன்களிலிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய பயண பொதிகளுக்குள், 272 பொதிகளாக பொதியிடப்பட்ட நிலையில், இந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
294 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய, 2945 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.