டாக்கா: டாக்காவில் இருந்து துபாய்க்கு பறந்த விமானத்தை கடத்திய மர்ம நபரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட பிமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான BG147 ரக விமானத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கடத்தினார். சிட்டாகாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து 148 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். ஆனால் 2 விமானிகள் அந்த மர்ம நபரின் பிடியில் சிக்கினர்.
மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் இந்த கடத்தலில் ஈடுபட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
அந்த நபரை மருத்துவமனைக்கு ராணுவத்தினர் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விமானத்தை கடத்தியது வங்கதேசத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மேஜர் ஜெனரல் மோட்டீர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டிய அந்த மர்ம நபர் வங்கதேசத்தின் பிரதமரை சந்திக்க விரும்புவதாக கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றபடி பயணிகளுக்கு அச்சுறுத்தல் எதுவும் தரவில்லை என கூறப்படுகிறது.