வவுனியா: இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது சாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன என்றும், புதிய அரசியலமைப்பு – நாட்டை பிரிவினைக்கு இட்டுச் செல்லுமென தென்னிலங்கையில் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
“புதிய அரசியலமைப்பு நகல் தொடர்பில் தமிழர் பிரதேசத்தில் ஒருவகையான பிரசாரமும், முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு வகையான பிரசாரமும் தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டும் பிரசாரமும் என, ஒவ்வொரு சாராரும் தத்தமது அரசியல் இருப்புக்காகவும் ஆதாயத்துக்காகவும் மேற்கொண்டு வருகின்றனர்”. எனவும் அவர் தெரிவித்தார்.