சர்வதேச தடைகளை சமாளித்து கத்தார் தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி?

qatarடோஹா: ஜூன் 2017இல் தன் அருகில் உள்ள நான்கு நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் தூதரக தடையால் பாதிக்கப்பட்டபோது, கத்தார் இரண்டு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று ஒரு நிபுணர் தெரிவிக்கிறார்.“கத்தார் நாட்டவர்களுக்கு இரண்டு விதமான சவால்கள் உள்ளன” என்று சொல்கிறார் லண்டனைச் சேர்ந்த Royal United Services Institute ன் மத்தியக் கிழக்கு ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ்.

“பின்லேடன் போன்ற உலகிற்கு அச்சுறுத்தலான பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு அல்ல கத்தார் என்பதை உலக நாடுகளுக்கு உணரச் செய்வது அதன் முதலாவது பிரச்சனை.”

“அடுத்தது, பொருளாதாரம் பலமாக இருக்கிறது என்று காட்டுவது. முதலீடு செய்வதற்கு நல்ல நாடு என்றும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் செய்து வளர்ச்சி பெறுவதை எளிதாக்குவதற்கான சூழ்நிலைகளை கத்தார் நாட்டவர்கள் உருவாக்கித் தருவார்கள் என்றும் காட்ட வேண்டும்.”சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. எண்ணெய் வளம் அதிகம் உள்ள கத்தார், பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று சொல்லி தடை விதிக்கப்பட்டது. இதை கத்தார் நாடு கடுமையாக மறுக்கிறது.

தடைகளை நீக்க வேண்டுமானால் இரானுடன் பொருளாதார ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது, அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 நிபந்தனைகளையும் அவை விதித்தன. இதில் எதையும் ஏற்க முடியாது என கத்தார் மறுத்துவிட்டது. அதனால் 19 மாதங்களாகியும் இன்னும் தடை நீடிக்கிறது.

தங்களுடைய வான்பரப்பை கத்தார் விமானப் போக்குவரத்து விமானங்கள் கடக்கக் கூடாது என்பது உள்ளிட்ட தடைகளை அந்த நான்கு நாடுகளும் விதித்துள்ளன.

பயங்கரவாதத்தை கத்தார் ஆதரிக்கிறதா என்ற கேள்வி இப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது இல்லை. சவுதி பத்திரிகையாளர் ஜமால் காஷோக்ஜி, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் உள்ள சௌதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சௌதி அரேபியாவுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் இதை பின்னுக்குத் தள்ளிவிட்டன.

தங்களுடைய பொருளாதாரம் இப்போதும் தொழில் செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது என்பதைக் காட்ட கத்தார் கடுமையாக முயற்சி செய்கிறது.எனவே, பொருளாதாரப் புறக்கணிப்புக்குப் பிறகு இந்த நாடு எந்த அளவுக்கு அதை சமாளித்துக் கொண்டிருக்கிறது?

தடை விதிக்கப்படுவதற்கு முன்பு வரையில், இப்போது கத்தார் நாட்டைப் புறக்கணிக்கும் நாடுகளின் மூலமாக, கத்தாரின் 60% இறக்குமதிகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக உணவுப் பொருள்கள் அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டன.

எனவே துருக்கி, இரான் வழியாக அவற்றைக் கொண்டு வருவதற்கு பத்திரமான மாற்று வழிகளை கத்தார் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டியிருந்தது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கும் வேகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. பால் தேவைகளை சமாளிப்பதை உறுதி செய்வதற்கு பல்லாயிரக்கணக்கான பசுக்களையும் இறக்குமதி செய்தது.

”மிக நன்றாகவே சமாளிக்கும் வகையில் இந்தப் பிரச்சனையை கத்தார் கையாள்கிறது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத கத்தாரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் உலகில் அதிக அளவுக்கு திரவ வடிவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ள கத்தார், மேற்கத்திய நாடுகளின் உணவு நிறுவனங்களில் பங்குகளை வாங்கியதற்குப் பதிலாக, பெரிய சொத்துகளைப் பயன்படுத்தியிருந்தால் நீண்டகால அடிப்படையில் உணவு சப்ளையை உறுதி செய்வதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று அவர் சொல்கிறார்.

கத்தாரின் இளவரசர் தமீம் பின் ஹமத் அல் தானி, கடந்த மாதம் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார்.

“பெரும்பாலான நாடுகள் என்ன செய்திருக்குமோ அதைவிட அற்புதமாக அரசு இதைக் கையாண்டிருக்கிறது,” என்று கத்தார் முதலீட்டு நிதி அமைப்பான அல்-ரயானின் மூத்த இயக்குநரான அக்பர் கான் கூறியுள்ளார்.

“முக்கியமாக, அவர்களுக்கு கணிசமான நற்பெயர் பெற்றுத் தரும் வகையில், சாமானிய மக்களின் வாழ்வு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டார்கள். தடை நடவடிக்கை உணர்வு ரீதியாக பாதித்திருக்கலாம், ஆனால், தொழில் செய்யும் எங்களுடைய திறனை பாதிக்கவில்லை” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கத்தாருக்கு நேரமும் சாதகமாக இருந்துள்ளது. தடை நடவடிக்கைகள் தொடங்கி மூன்று மாதங்களில், 2017 செப்டம்பரில், 7.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹமத் ஆழ்கடல் துறைமுகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. அதன் மூலம் பெரிய சரக்கு கப்பல்களையும் நாட்டுக்கு வரவழைப்பது சாத்தியமாகிவிட்டது.

முன்பு, பெரும்பாலும் மறு-ஏற்றுமதிகளை கத்தார் நம்பியிருந்தது. உலகெங்கும் இருந்து வரும் சரக்குகளை துபாய், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அருகில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு வந்து, பிறகு சிறிய கப்பல்களில் கத்தாருக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.உணவு மற்றும் நுகர்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ததுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பால், குறிப்பாக அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்கு தீவிர முயற்சிகளை கத்தார் எடுத்து வருகிறது.

qatar
yourkattankudy/qatar

அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ரோஸ், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் முனுஷின் போன்றவர்களுடன் கடந்த ஆண்டு நடந்த சந்திப்புகள் பற்றி கத்தார் நாட்டின் வணிக அமைச்சக இணையதளத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் டாலர் மதிப்புக்கு போயிங் பயணிகள் விமானங்களுக்கு கத்தார் விமானப் போக்குவரத்து நிறுவனம் order தந்திருப்பது மற்றும் அமெரிக்காவில் கத்தாரின் ஒட்டுமொத்த முதலீடுகள் பற்றியும் அதில் சிறப்பம்சமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியுடனும் பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்கு கத்தார் வர்த்தகத் துறை அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.“வளைகுடா நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுடன் அதிக அளவில் புதிய கத்தார் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளால்தான் தூதரக மற்றும் பொருளாதார மாற்றங்கள் நடந்துள்ளன,” என்கிறார் கான்.

“தடை நடவடிக்கைகளுக்குப் பிறகும் தொழில்கள் வழக்கம் போல நடைபெறுகின்றன என்பதை தெரிவிப்பதன் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்புகள் இருக்கின்றன. இரு வழிகளிலும் வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே, கத்தாரின் மிகவும் குறிப்பிடத்தக்க பண பலத்தைக் காட்டுவதாக மட்டும் இது நடைபெறவில்லை. ஆனால், கத்தாரில் வெளிநாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சிறப்பம்சங்களுடன் காட்டுவதாக இது உள்ளது.”கத்தாரில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஊக்கம் தருவதற்கு, தொழிலாளர் சட்டங்கள், தனியார்மயமாக்கல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பாக பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக பங்கு வரையறைகள் அளிக்கப்படுகிறது. இவற்றால், நாட்டில் முதலீடு செய்து, செயல்படுவதை அரசு எளிதாக்கியுள்ளது.

இருந்தபோதிலும், கட்டமைப்பு பிரச்சனைகள் வெளிநாடுகளின் பெரிய அளவிலான செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பதால், பலருக்கும் இன்னும் திருப்தி ஏற்படவில்லை.

“கத்தாரில் அதிகாரவர்க்கம் மிகவும் தீவிரமாக செயல்படுகிறது. அதனால் தான் சந்தை அளவு சிறியதாகவும், போட்டி குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் உள்ளன” என்று சொல்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத கத்தாரின் முன்னாள் ஆலோசகர்.

இருந்தபோதிலும், உலகில் எண்ணெய் வளத்தில் மூன்றாவது பெரிய நாடாக உள்ள கத்தார் தடை நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் உணவு மற்றும் நுகர்பொருள்கள் சப்ளைகளை உறுதிப்படுத்தும் மாற்று வழிகளை ஏற்படுத்துவதில் தடுமாற்றம் இருந்தாலும், இதை சமாளிக்க முடிந்துள்ளது.

திரவ வடிவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் உலகில் மிகப் பெரிய நாடாக உள்ள கத்தார், 2017-ல் 81 மில்லியன் டன் அல்லது உலக ஏற்றுமதியில் 28% அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

தினமும் 600,000 பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது கத்தார். ஆனால், எரிவாயுவில் அதிக கவனம் செலுத்துவதற்காக, பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான OPEC அமைப்பில் இருந்து அது இந்த ஆண்டு விலகியுள்ளது. இந்த நடவடிக்கைக்கும் தடை நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று அந்த நாடு கூறியுள்ளது.தடை விதித்தபோதிலும் அதனுடைய பொருளாதாரம் தொடர்ந்து வளர்கிறது என்ற அளவிற்கு கத்தார் நாட்டின் ஹைட்ரோகார்பன் வளம் அதிகமாக உள்ளது. 2017ல் அதன் பொருளாதாரம் 1.6% வளர்ந்துள்ளது. 2018-ல் இது 2.4% ஆக அதிகரிக்கும் என்றும், 2019-ல் 3.1% ஆக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று பன்னாட்டு நாணய நிதியம் (IMF) கூறியுள்ளது.

“மற்ற வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடும்போது, கத்தார் நாட்டில் பொருளாதார பரவலாக்கம் மிக பலவீனமாக இருக்கிறது,” என்று லண்டனைச் சேர்ந்த முதலீட்டுப் பொருளாதார அமைப்பின் மத்திய கிழக்குப் பொருளாதார நிபுணர் ஜாசன் டுவே கூறியுள்ளார்.

“ கத்தாரில் வசிப்பவர்களில், அந்நாட்டுக் குடிமக்கள் சுமார் 300,000 பேர் மட்டுமே இருக்கிறார்கள். வேலைபார்க்கும் கத்தார் நாட்டவர்கள் அனைவருக்கும் பொதுத் துறை நிறுவனங்களில் அந்த அரசு வேலை வழங்க முடியும்.”

“அதுவாக விரும்பினால் தவிர தொழிலுக்கு, பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை கத்தாருக்கு இல்லை,” என்கிறார் ஸ்டீபன்ஸ்.

“கத்தார் நாட்டவர்கள் விரும்பினால், அதிக எரிவாயுவை உற்பத்தி செய்வதன் மூலம் தாக்குபிடித்துவிட முடியும்,” என்று அவர் சொல்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s