– நமது நிருபர்
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்துவரும் காத்தான்குடி உறவுகளின் 7வது ஒன்று கூடல் 27-12-2018 வியாழக்கிழமை Luton நகரில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரவு பத்துமணிவரை இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்தில் பரந்து வாழும் காத்தான்குடி உறவுகள் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.
அப்துல்லாஹ் பயாஸ் அவர்களின் இனிமையான கிராஅத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில், பகல் உணவு, சிற்றுண்டிகள், இராப்போசணம் வயிறுகளை நிறைத்துச் செல்ல, காவா டீ வரண்ட நாக்குகளை நனைத்துச் சென்றது.
சிறுவர்-சிறுமியரின் நிகழ்ச்சிகள், பெரியோர்களுக்கான பட்டிமன்றம், நாடகம் அனைத்துமே பிரமாதம்.
1980களின் பிற்பாடுகளில் இலங்கை வானொலி தழிழ்ச்சேவையில் புகழ்பெற்றிருந்த அம்பிகா ஜூவலரியின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அப்போட்டியில் பி.எச். அப்துல் ஹமீதினால் கொடுக்கப்பட்ட எழுத்துக்களில் சிறப்பாகப் பாடி முதல் பரிசை மாத்திரம் வெல்லாமல், போட்டி நிறைவில் முழுமையான பாடலையும் பாடி அன்று ஊருக்குப் புகழ் சேர்த்த பாடகர் முகமட் பாயிஸ் அவர்களின் கானக்குரல் மண்டபத்தை தேனாய் நனைத்துச் சென்றது.
வருடத்தில் இரு முறை இடம்பெறும் இவ் ஒன்று கூடல் மென்மேலும் சிறப்பாக தொடர வேண்டுமென வந்தோர்களில் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
கோடை விடுமுறைக்கான அடுத்த ஒன்றுகூடல் இன்ஸாஅல்லாஹ் Crawley நகரில் இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.