கொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதைப் போலவே 7 எம்.பி.க்கள் வைத்துள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நாளை அதிபர் மைத்ரிபால சிறிசேன நாட்டிற்கு உரையாற்றுவார் என்றும் புதிய அமைச்சரவை திங்களன்று நியமிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் எம் பி லக்ஷ்மன யாபா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேறவில்லை என்றால் அரசு சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். தமது கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் செய்து, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உதவியோடு ஜனாதிபதி பதவிக்கு வந்தார் அவர்.
சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியையும் அவர் நடத்தி வந்தார். அந்தக் கூட்டணி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டணி அரசை நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் இலங்கையில் நடத்திவந்தன.
சுதந்திரக் கட்சியின் மைத்ரிபால ஜனாதிபதியாக உள்ளபோதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்தக் கூட்டணியில் இருந்து மைத்ரிபாலவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறுவதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் மைத்ரிபால சிரிசேன.
yourkattankudy/politics
எதிரெதிர் துருவங்களாக இருந்த மைத்ரிபாலவும் ராஜபக்ஷவும் தற்போது ஓரணியில் வந்துவிட்டனர். மாற்றுக் கட்சியில் இருந்தாலும் இணைந்திருந்த அதிபர் மைத்ரிபாலவும் ரணிலும் எதிரெதிர் அணிகளாகிவிட்டனர்.
இந்நிலையில், தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் தாமே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். இதனால், யார் உண்மையில் பிரதமர் என்ற அரசமைப்புச் சட்டக் குழப்பம் உருவானது. இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதிதான் வெளியிட முடியும்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்த வெல தெரவித்துள்ளார்.
மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது” என இலங்கை செய்தியாளர் தெரிவிக்கிறார்.