கருணாநிதி

19-1376883833-karunanidhi-76-600[1]சென்னை: ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 – 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துவேல் கருணாநிதி தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார். தவிர, பள்ளிக்கூடத்தில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த பானகல் அரசர் குறித்த 50 பக்க நூலும் அவரை வெகுவாக கவர்ந்தது.

கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’ என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.

17 வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கருணாநிதி, பிற்காலத்தில் தன் தலைவனாகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த சி.என். அண்ணாதுரையை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.

1949ல் பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை சி.என். அண்ணாதுரை துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகியிருந்தார் மு. கருணாநிதி. 25 வயதே நிரம்பியிருந்த கருணாநிதி கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி, வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.

1953ல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி 6 மாதம் சிறைசென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.

மலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கருணாநிதி உச்சத்திற்கு சென்றார்.

1989ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கருணாநிதி, 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக தி.மு.கவை வைத்திருந்தார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர். தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளில் தி.மு.க அமைச்சர்கள் இடம்பெற்றனர்.

ஆனால், இந்த காலகட்டத்தில் கருணாநிதி கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றது, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு சிக்கலான, விமர்சனத்திற்குரிய தருணமாகவே பார்க்கப்படுகிறது. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மாநில உரிமைக்கான குரல்

கருணாநிதி முதலமைச்சராக பங்கேற்ற காலத்திலிருந்தே மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி ஆகியவை குறித்து தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். முதல்வராக பதவியேற்றதும் 1969ல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழு, இந்தியாவின் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கவேண்டிய உறவைச் சுட்டிக்காட்டியது. கருணாநிதி செய்த முயற்சிகளின் காரணமாகத்தான் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்டது.

1996-2001ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக்காலம், தி.மு.க. ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல 2006-2011 ஆட்சிக் காலம் கருணாநிதி கடும் விமர்சனங்களுக்குள்ளான காலமாகவும் அமைந்தது. 2016ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போனதற்கு, இந்த காலகட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே முக்கிய காரணமாக அமைந்தன.

கலைத்துறையில் பங்கு

அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கருணாநிதி, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.

19-1376883833-karunanidhi-76-600[1]

எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த ‘உடன்பிறப்பே’ கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.

இந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் கருணாநிதியின் மரணம், ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s