france 2018மொஸ்கோ: மொஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. எனினும் இறுதியில் பிரான்ஸ் வென்றது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரான்ஸ் வீரர் ஆன்டோன் கிரீஜ்மன் அட்டகாசமாக பந்தை உதைத்தார். அந்த பந்தை தலையில் முட்டி தடுப்பதற்காக எம்பினார் குரோஷியா வீரர் மரியோ மண்ட்ஜூகிக். ஆனால் பந்து அவர் தலையில் பட்டு இன்னும் எம்பி கோல் கீப்பரின் கையில் தஞ்சம் அடையாமல் குரேஷியாவின் வலையில் விழுந்தது .

இதையடுத்து உலககோப்பை இறுதி போட்டியில் 1-0 என்ற முன்னிலையுடன் விளையாடத்துவங்கியது பிரான்ஸ்.

ஆனால் விரைவிலேயே குரோஷியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெரிசிச் இடது காலால் ஒரு கோல் அடித்தார்.

குரோஷிய வீரர்கள் இந்த உலக கோப்பையில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து ஆட்டத்தில் பின்தங்குவதும் பின்னர் மீண்டு வந்து வெற்றி பெறுவதுமாக இருந்தனர். டென்மார்க் அணிக்கு எதிராக ரவுண்ட் ஆஃப் 16, ரஷ்ய அணிக்கு எதிராக காலிறுதி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதி போட்டிகளில் முதல் கோல் எதிரணி அடித்திருந்தாலும் மீண்டும் வந்து வென்றது குரேஷியா.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரீஜ்மன் ஒரு கோல் அடித்தார். பத்தே நிமிட இடைவெளியில் மீண்டும் முன்னிலை பெற்றது பிரான்ஸ் அணி.உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

france 2018

முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பால் போக்பா அடித்த கோலால் பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றது.

குரோஷியா அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி கிட்டத்தட்ட 22 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடிக்கவே பிரான்ஸ் 4-1 என மிகப்பெரிய முன்னிலை பெற்றது. குரேஷியா கோல் கீப்பரால் கோல் மழை தனது வலையில் பொழிவதை பார்க்க மட்டுமே முடிந்தது.தொடர்ச்சியாக கோல் வாங்கிக் கொண்டிருந்தாலும் குரேஷியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மரியோ மண்ட்ஜூகிக் ஒரு கோல் அடிக்க குரேஷியாவின் நிலை 2- 4 என்றானது.

உலககோப்பை கால்பந்து மற்றும் ஈரோ கோப்பை/சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கோல் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் மரியோ மண்ட்ஜூகிக்.

முன்னதாக ஃபெரன்க் புஸ்கஸ், ஜோல்டன், முல்லர், ஜினடின் ஜிடேன் இந்த சாதனையைச் செய்திருந்தனர்.

போட்டி முடிவில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் வென்றது.