england flagலண்டன்: மதுவிலும், சூதுவிலும் தங்களை அர்ப்பணித்த இங்கிலாந்து மக்கள் தங்களது அணி 3வது இடத்தை அடைந்தாவது வீடு வந்து (Coming Home) சேருமா என எதிர்பார்த்திருக்கும் இந்நேரத்தில், உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்து குடும்ப வாழ்க்கையில் விரிசல்களை ஏற்படுத்தி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2002, 2006 மற்றும் 2010 உலகக்கோப்பை போட்டிகளில் (2014க்கு பிந்தைய தரவுகள் இல்லை) இங்கிலாந்து கால்பந்து அணி தோற்ற தினங்களில் ஆங்கிலேய காவல்துறை பிரிவுகளில் ஒன்றான லன்காஸ்டர் பிரிவில் பதிவான குடும்ப வன்முறை வழக்குகள் வழக்கத்தைவிட 38 சதவீதம் அதிகரித்தது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற அல்லது ஆட்டத்தை சமன் செய்த நாள்களில் குடும்ப வன்கொடுமை 26 சதவீதம் அதிகரித்திருந்தது.

இங்கிலாந்து அணி போட்டியில் விளையாடிய அடுத்த நாளும் குடும்ப வன்கொடுமையில் 11 சதவீதம் அதிகரிப்பு இருந்ததையும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

இந்த ஆய்வில் ஒரு காவல்துறை பிரிவின் புள்ளிவிவரங்களே எடுத்துகொள்ளப்பட்டாலும், அந்நாட்டிலுள்ள பிற காவல்துறைப் பிரிவுகளும் இந்த உரையாடலில் கலந்து கொண்டு குடும்ப வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது குடும்ப வன்முறையில் அதிகரிப்பு இருந்ததே மக்கள் வன்முறை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு காரணமாகும்.

இருப்பினும், பதற்றமானதொரு கால்பந்து போட்டி மட்டுமே குடும்ப வன்கொடுமையை தூண்டுவதில்லை. குடிப்பழக்கம், போதைப்பெருள் மற்றும் சூதாட்டம் ஆகியவை கலந்து உருவாகிற நடத்தைகளாக இவை இருக்கலாம்.

2006/2017ம் ஆண்டில் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் 16 முதல் 59 வயது வரை 7 லட்சத்து 13 ஆயிரம் ஆண்களும், 12 லட்சம் பெண்களும் என சுமார் 1.9 மில்லியன் வயதுவந்தோர் குடும்ப வன்கொடுமைகளை அனுபவித்துள்ளனர்.

அத்தகைய வன்கொடுமையை அனுபவித்தவர்களில் ஒருவர்தான் பென்னி. அவர் தன்னுடைய காதலரோடு 2 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தபோது, வீட்டில் கொடுமைகளை அனுபவித்ததாக தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டி விளையாடப்படும் சத்தம் கேட்கிறபோது, காதலரிடம் இருந்து மிகவும் தொலைவில் இருக்க முயல்வதுதான் அவரது எதிர்வினையாக அமைந்தது.

அவர்கள் ஓர் அறையுடைய குடியிருப்பில் வாழ்ந்ததால், அவ்வாறு தொலைவில் இருப்பது எளிதாக இருக்கவில்லை.

england flag

தன்னுடைய காதலருக்கு வேறு நண்பர்கள் இருக்கவில்லை என்று நினைவுகூரும் பென்னி, அவருடைய பொழுதுபோக்கை பகிர்ந்துகொள்ளும் வகையில், உடனிருந்து விளையாட்டை பார்ப்பதை விரும்புவார் என்கிறார்.

அவ்வாறு பென்னி உடனிருக்கும்போது, காதலரின் கால்பந்து அணி (செல்சா) வெற்றியடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக இருப்பாராம். அந்த அணி தோல்வியடைந்து விட்டால் என்ன நிகழும் என்பது அவருக்குத் தெரியும்… உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக அவர் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகரிக்கும் என்கிறார்.

“இதைப் பற்றி திரும்பவும் எண்ணி பார்க்கையில், கால்பந்து என்பது வெறுமனே ஒரு சாக்குப்போக்குதான்,” என்று பென்னி குறிப்பிடுகிறார்.

“குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை நான் தவறாக வைத்துவிட்டாலும், என் காதலர் என்னிடம் அப்படித்தான் நடந்து கொள்வார்” என்று கூறுகிறார் பென்னி.

பென்னியின் காதலரின் கால்பந்து அணி தோல்வியடைந்துவிட்டால், கொடுமைகள் மிகவும் அதிகமாகும்.

“நான் என்ன சொன்னாலும், என்னோடு சண்டையிட்டு கொண்டு அமைதியாக 4 அல்லது 5 நாட்களுக்கு என்னை முற்றிலும் கண்டுகொள்ளவே மாட்டார். அப்போது இரவு சாப்பாட்டை சமைப்பது போன்ற செயல்களை செய்யும் அவர், அதில் தனக்கு எதுவும் கொடுக்கமாட்டர்” என்று பென்னி தெரிவித்திருக்கிறார்.

‘உமன்ஸ் எய்டு’ அறக்கட்டளையின் கூற்றுப்படி இது உணர்ச்சி ரீதியிலான கொடுமை. 2015ம் ஆண்டு குற்றமாக மாறிய ‘பலவந்த கட்டுப்பாடு’ என்ற வரையறையின் கீழ் இந்த கொடுமை வருகிறது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் நிலை எவ்வாறு சிலரை எதிர்மறையாக பாதிக்கிறது என்பதை எண்ணி பார்க்க இந்த விரிவான உரையாடல் உதவுகிறது.

ஆனால், கால்பந்து விளையாட்டும், மதுப்பழக்கமும்தான் குடும்ப வன்கொடுமைக்கான காரணங்கள் என்று எண்ணிவிடக் கூடாது என்று பென்னி வாதிடுகிறார்.

எல்லா குடும்ப வன்கொடுமைகளும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் வன்முறை அல்லது ‘ஆண் கலாசாரம்’ என்று எளிதாக இனங்காணக் கூடாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கால்பந்துதான் குடும்ப வன்கொடுமைக்கு ஆணிவேர் என்று குறிப்பிட்டு காட்டுவது, எதற்கும் உதவப்போவதில்லை. தவறாகவே வழிநடத்தும் என்று ‘ரிஃபுஜ்’ அறக்கட்டளையின் குடும்ப வன்கொடுமைக்கான தலைமை செயலதிகாரி சன்டிரா ஹோர்லே தெரிவிக்கிறார்.

குடும்ப வன்கொடுமைக்கு மதுவையும், விளையாட்டையும் அல்லது இவை இரண்டையும் காரணமாக காட்டுவது, கொடுமை செய்வோரை இந்த செயல்பாட்டில் இருந்து விலக்கி வைக்கிறது மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்பதை தடுக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் முடிந்த பின்னரும், ஒவ்வொரு நாளும் தங்களின் காதலர்களால் வன்முறையையும், கொடுமைகளையும் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டிகளை பார்க்கும்போது மட்டுமே இது நடைபெறுவதில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்,

இதனை பென்னி ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை அவர் மகிழ்சியாக பார்த்தபோது, சில நடத்தைகள் குடும்ப வன்கொடுமைகளுக்கு தூண்டுதலாக வருவதை அவர் கண்டுள்ளார்.

மது குடித்திருக்கும்போது, அல்லது முரடனாக இருக்கும்போது மற்றும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், குடும்ப வன்கொடுமைகள் எளிதாக நிகழ்வதை மக்கள் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று பென்னி குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்து தோல்வியடையும் என்றும் அதிகமான இங்கிலாந்து மக்கள் சூதிலும், பந்தயத்திலும் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.